தென்னிலங்கையில் பரவும் ஒருவகை வைரஸ் தாக்கம் காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 9ஆக அதிகரித்துள்ளது.
குறித்த நோய்த்தாக்கத்தால் நூற்றிற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், இவ்வாரம் இந்நோய் தாக்கத்தால் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோய் தடுப்பு பிரிவின் இயக்குநர் வைத்தியர் அனில் திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
குறித்த ஒன்பது பேரும் ஏற்கனவே தொடர்ச்சியாக சிகிச்சை பெற்று வந்தவர்கள் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
கடந்த வருடம் இந்த வைரஸ் தாக்கத்தல் நாடளாவிய ரீதியில் 90 பேர் உயிரிழந்ததாக தெரிவித்த வைத்தியர், இவ்வருடம் தென்னிலங்கையில் மட்டும் இந்த வைரஸ் தாக்கம் பரவியதோடு உயிரிழப்பும் கணிசமான அளவு குறைவடைந்துள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.
எவ்வாறாயினும், இந்த வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்தியுள்ளதாகவும், நோய் பரவாமல் தடுக்கும் நடைமுறைகளை துரிதமாக மேற்கொண்டு வருவதாகவும் வைத்தியர் அனில் திஸாநாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.