கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தைச் சேர்ந்தவர் மரிகலய்யா. கால் டாக்ஸி ஓட்டுனர் ஆக இருந்த இவர் 8 ஏக்கர் நிலத்தில் விவசாயம் பார்த்து வந்துள்ளார். இவருக்கு சசிகுமார் மற்றும் ராஜேஷ் என்ற 2 மகன்கள் உள்ளனர்.
இந்நிலையில் இவரின் ஒரு ஏக்கர் விளை நிலத்தை ரூபாய் 30 லட்சத்திற்கு விற்று மூன்று பேரும் பங்கு பிரித்துக் கொள்ளலாம் என தனது மகன்களிடம் அவர் தெரிவித்துள்ளார். இதற்கு சம்மதம் தெரிவித்த மகன்கள் அவரது பங்கைக் கொடுக்காமல் காலதாமதம் செய்து வந்துள்ளனர்.
பணம் கொடுத்தால் தான் நிலத்தை விற்பதற்கான பத்திரத்தில் கையெழுத்து போட முடியும் என மரிகலய்யா தெரிவித்துள்ளார். பத்திரப்பதிவு செய்யும் பொழுது பணத்தை தருவதாக அவர்கள் கூறியுள்ளனர். இதை நம்பி அவர் பத்திரப்பதிவு அலுவலகத்திற்குச் சென்றுள்ளார் .
ஆனால் அங்கும் மகன்கள் பணத்தோடு வராமல் இருந்ததால் உடனடியாக அவர் அங்கிருந்து வீடு திரும்பினார் மேலும் மகன்கள் மீது இருந்த பயத்தால் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இந்நிலையில் அவர் கையெழுத்து போடாததால் ஆத்திரமடைந்த அவரது மகன்கள் சம்பவத்தன்று இரவு வீட்டிற்குள் புகுந்து அவரை கத்தியால் சரமாரியாக குத்திவிட்டு தப்பி சென்றனர். தகவல் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தலைமறைவாக இருந்த அவரின் மகன்கள் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
10 லட்சம் ரூபாய் பணத்துக்காக பெற்ற தந்தையை அவர்கள் கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது








































