குடி போதையில் கார் விபத்து ஏற்படுத்தியதாக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும் சச்சின் தெண்டுல்கரின் நண்பருமான வினோத் காம்ப்ளி கைது செய்யப்பட்டார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் வினோத் காம்ப்ளி. இவரும், கிரிக்கெட்டின் சகாப்தமான தெண்டுல்கரும் பள்ளி கிரிக்கெட் போட்டியில் புதிய சாதனை படைத்து இருந்தனர்.
தெண்டுல்கரின் நண்பரான இவரால் சர்வதேச போட்டிகளில் சாதிக்க முடியவில்லை.
இடது கை பேட்ஸ்மேனான வினோத்காம்ப்ளி எப்போதுமே சர்ச்சையில் சிக்கி கொள்வார்.
இந்தநிலையில் அவர் குடித்து விட்டு வாகனம் ஓட்டி உள்ளார். மும்பை பாந்த்ரா சொசைட்டி பகுதியில் வினோத் காம்ப்ளி குடித்து விட்டு காரை ஓட்டி சென்றுள்ளார். இந்த கார் விபத்துக்குள்ளானது. அவரது கார், மற்றொரு கார் மீது மோதியது.
இதுதொடர்பாக அவர் மீது போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. இந்த புகாரின்பேரில் வினோத் காம்ப்ளியை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
இந்த சம்பவத்துக்கு பிறகு காம்ப்ளி தனது வளாகத்தில் உள்ள காவலாளி மற்றும் குடியிருப்பு வாசிகளுடன் வாக்குவாதம் செய்ததாக கூறப்படுகிறது.
50 வயதான வினோத் காம்ப்ளி 17 டெஸ்டில் விளையாடி 4 சதம் உள்பட 1,084 ரன்கள் எடுத்துள்ளார். 104 ஒருநாள் போட்டியில் விளையாடி 2 செஞ்சூரி உள்பட 2477 ரன் எடுத்துள்ளார்.
1991-ம் ஆண்டு சர்வதேச போட்டியில் அவர் அறிமுகமானார். 2000-ம் ஆண்டு அக்டோபர் மாதம் அவர் கடைசி சர்வதேச போட்டியில் விளையாடினார்.








































