ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் அதன் பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தனவுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ரணில் விக்ரமசிங்க, ருவான் விஜேவர்தனவுக்கு எவ்வித பொறுப்புகள் மற்றும் பணிகளை வழங்காது ஓரங்கட்டியுள்ளார் என ஐக்கிய தேசியக் கட்சியின் தகவல்கள் கூறுகின்றன.
இதன் காரணமாக விஜேவர்தன ஏற்பாடு செய்யும் கூட்டங்கள் எதற்கும் ரணில் விக்ரமசிங்க அனுமதி வழங்குவதில்லை என தெரியவருகிறது.
விஜேவர்தன ஒழுங்கு செய்திருந்த இளைஞர், யுவதிகள் கலந்துகொள்ளும் கூட்டத்தை ரணில் நிறுத்தியுள்ளார். இந்த கூட்டம் சீதுவை ரமடா ஹொட்டலில் நடைபெறவிருந்தது.
இதற்கு பதிலாக ரணில் விக்ரமசிங்க, இளைஞர், யுவதிகளுடன் நீர்கொழும்பில் சந்திப்பொன்றில் கலந்துகொண்டுள்ளார்.
இந்த சந்திப்பில் முன்னாள் அமைச்சர் சாகல ரத்நாயக்க மாத்திரமே ரணில் விக்ரமசிங்கவுடன் கலந்துகொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.
எதிர்வரும் 12 ஆம் திகதி மற்றும் 13 ஆம் திகதிகளில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு புதிய உறுப்பினர்களை சேர்க்கும் நடவடிக்கைகள் கொழும்பில் ஆரம்பிக்கப்படவுள்ளதுடன் அதற்கான பொறுப்பை ரணில் விக்ரமசிங்க, சாகல ரத்நாயக்கவுக்கே வழங்கியுள்ளார்.
ருவான் விஜேவர்தன, ரணில் விக்ரமசிங்கவின் மருமகன் முறை உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது.








































