இலங்கையில் இடம்பெறும் சமீபத்திய அமைதியான போராட்டங்கள் மூலம் சுற்றுலா பயணிகள் அல்லது சுற்றுலா தலங்கள் இலக்கு வைக்கப்படவில்லை என வெளிநாட்டலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.
இலங்கைக்கு வருகைதரும் அனைத்து சுற்றுலாப் பயணிகளும் நாடு முழுவதும் சுதந்திரமாக பயணிக்க முடியும் என்றும் வெளிநாட்டலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த விடயம் தொடர்பாக அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ள அமைச்சு, இலங்கை தொடர்பாக கடந்த 6 ஆம் திகதி அமெரிக்கா வெளியிட்டுள்ள பயண வழிகாட்டல்களை மீளாய்வு செய்வதில் கவனம் செலுத்தி வருவதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
கொரோனா தொற்றுடன் , கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் இலங்கை குறித்து அமெரிக்காவின் பயண எச்சரிக்கை மூன்றாம் மட்டத்தில் காணப்பட்டது. எனினும் இது அண்மையில் புதுப்பிக்கப்படவில்லை என்பதை வெளிநாட்டலுவல்கள் அமைச்சு தெரிவித்துக்கொள்கிறது.
அதுதவிர உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் பின்னர் விடுக்கப்பட்ட அமெரிக்க பயண ஆலோசனையில் பயங்கரவாதம் பற்றிய குறிப்பு, பயங்கரவாதம் இருந்த அல்லது ஆபத்தில் இருக்கும் உலகில் உள்ள நாடுகள் குறித்த அமெரிக்க பயண ஆலோசனையின் நிலையான மொழியின் அடிப்படையிலானது என்றும் கூறியுள்ளது,
கொரோனா தொற்றின் பின்னர் சுற்றுலாத்துறை படிப்படியாக வளர்ச்சியடைந்து வருகின்ற நிலையில் , சுற்றுலாப்பயணிகளின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்பதை வெளிநாட்டலுவல்கள் அமைச்சு உறுதியாக தெரிவித்துக் கொள்கிறது.
இலங்கை தனது தாயகத்திற்கு வருகை தருபவர்களை தொடர்ந்து வரவேற்கிறது மற்றும் அனைவருக்கும் அதிகபட்ச பராமரிப்பு மற்றும் சேவைகளை வழங்க உறுதிபூண்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.








































