மகாசங்கத்தின் வழிகாட்டுதலின்படி கூடிய விரைவில் சர்வகட்சி அரசாங்கம் அமைக்கப்பட வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
அவ்வாறு அமைக்கப்படாவிட்டால் இலங்கை கலவரங்கள் மற்றும் போராட்டங்களின் மையமாக இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.
கண்டியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அரசாங்கத்தின் கீழ் பிரதமர் பதவியை ஏற்கமாட்டேன் என்றும் தெரிவித்துள்ளார்.
பொருளாதார மந்தநிலையில் இருந்து இலங்கையை மீட்பதற்கு தற்போதைய அரசாங்கத்திற்கு திறமையும் அறிவும் இல்லை என்றும் மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார்.
எனவே அனைத்து ஆளும்கட்சியை சேர்ந்த அமைச்சர்களும் பதவி விலகுமாறு மைத்திரிபால சிறிசேன அழைப்பு விடுத்துள்ளார்.
அத்தோடு அரசாங்கம் உடனடியாக இராஜினாமா செய்து அனைத்துக் கட்சி ஆட்சி அமைக்க வழிவகை செய்ய வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.








































