பண்டாரகம மற்றும் அலுபோமுல்ல பிரதேசத்தில் போதைப்பொருள் கடத்தல் மூலம் சம்பாதித்த 5 கோடி ரூபாவுக்கும் அதிகமான பணத்துடன் சந்தேக நபர் ஒருவரையும் பிரதான போதைப்பொருள் வியாபாரியின் தாயையும் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.
பண்டாரகம பிரதேசத்தில் உள்ள தனியார் வங்கிக் கணக்கில் வழமைக்கு மாறாக பணம் வரவு வைக்கப்படுவதையும், அதனை ஏடிஎம் இயந்திரங்களில் இருந்து விரைவாக எடுக்கப்படுவதையும் அதிகாரிகளினால் அவதானிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, விசாரணை அதிகாரிகளால் ஆரம்பிக்கப்பட்ட விசாரணையின் போது 34 வயதான சந்தேக நபர் மற்றும் பிரதான கடத்தல்காரரின் 67 வயதான தாயார் கைது செய்யப்பட்டுள்ளனர்.
முதற்கட்ட விசாரணை
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் குடு சலிந்துவின் பண முகாமையாளர் என அழைக்கப்படும் பிரதீப் நிஷாந்த என தெரியவந்துள்ளது.
முதற்கட்ட விசாரணையில் போதைப்பொருள் விற்பனை மூலம் கிடைக்கும் பணத்தை வங்கி கணக்கில் வரவு வைப்பதாக தெரியவந்துள்ளது.
சந்தேகநபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் தெரியவந்த தகவலுக்கமைய, பொலிஸாரினால் கைப்பற்றப்பட்ட 5 கோடி ரூபாவிற்கும் அதிகமான பணத்தில் 3 கோடி ரூபாயானது, கட்டப்பட்டு வரும் வீட்டின் தண்ணீர்த் தொட்டியின் அடியில் கான்கிரீட் போட்டு சீல் வைக்கப்பட்டிருந்த இரகசிய அறையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், அலுபோமுல்லையில் உள்ள கடத்தல்காரருக்குச் சொந்தமான வீடு ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது, தற்போது குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் காவலில் உள்ள குற்றவாளியான கூடு சலிந்துவின் பெயரில் வெளியிடப்பட்ட 21 ஆவணங்களை போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் கண்டுபிடித்துள்ளனர்.
இந்த மோசடியில் ஈடுபட்ட முக்கிய சந்தேக நபரை கண்டுபிடிப்பதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.








































