முல்லைத்தீவு பரந்தன் A-35 வீதியில் மிக நீண்ட காலமாக காணப்படும் வட்டுவாகல் பாலத்தினை மூடி மழை வெள்ளநீர் பாய்ந்தோடுவதால் மக்கள் பெரிதும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
அதோடு விபத்து ஏற்படும் சாத்தியங்கள் அதிகளவாக இருப்பதனால் பாலத்தின் இருமருங்கிலும் பொலிஸார் மற்றும் கடற்படையினர் கடமையில் ஈடுபட்டுள்ளனர்.
நிரம்பிய நந்திக்கடல் -ஆபத்தான நிலையில் பயணம்
நாட்டின் பல பகுதிகளிலும் நிலவிவரும் சீரற்ற காலநிலைக்கு மத்தியில் முல்லைத்தீவு மாவட்டத்தில் அதிக மழை தொடர்ச்சியாக பெய்து வருகின்றது. இதனால், நந்திக்கடல் நீர் மட்டம் நிரம்பியுள்ளது.
இதனால் வட்டுவாகல் பாலத்தின் நீர்மட்டம் உயர்ந்து பாலத்தினை மூடியதுடன் நீர் பாய்ந்தோடாமல் தேங்கியிருக்கும் நிலை காணப்படுகின்றது. பாலத்தின் பல இடங்களில் உடைவுகள் ஏற்பட்டு சேதமடைந்து ஆபத்தான நிலையில் காணப்படுகின்றது.
இதனால் பயணிகள் உயிரை கையில் பிடித்துகொண்டு, கடல் எது வீதி எதுவென தெரியாது பயணம் செய்யவேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் வட்டு வாகல் பாலத்தின் இரு கரையிலும் பொலிஸார், கடற்படையினர் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். வீதி அபிவிருத்தி அதிகாரசபையினர் பாலத்தின் இரு கரையையும் அடையாளப்படுத்தும் நடவடிக்கையில் தற்போது ஈடுபட்டு வருகின்றனர்.








































