அஞ்சனை மைந்தன், வாயு புத்திரன் என்று அழைக்கப்படும் அனுமன் பிறந்த நாள் தான் அனுமன் ஜெயந்தியாக கொண்டாடப்படுகிறது. ராமரின் தீவிர பக்தரான அனுமன், ராமாயண காவியத்தில் முக்கிய இடத்தைப் பிடித்தவர். வலிமை, அறிவு, துணிச்சல், புகழ், வீரம், ஆரோக்கியம், சாதுர்யம் என அனைத்தையும் தன்னுள் கொண்டவர். இவ்வளவு திறமைகளை கொண்ட அனுமன் மார்கழி மாதம் அமாவாசை திதியும், மூல நட்சத்திரமும் இணைந்திருக்கும் நாளில் பிறந்தார்.
அனுமன் ஜெயந்தி அன்று அனுமனை வழிபட்டால், சிவனையும், பெருமாளையும் வணங்கிய புண்ணியம் கிடைக்கும். மேலும் அனுமன் ஜெயந்தியில் அனுமனைத் தவறாமல் வணங்கினால், இதுவரை சந்தித்த துன்பங்கள் மற்றும் தொல்லைகள் நீங்கும். அனுமன் ஜெயந்தி வெவ்வேறு பகுதிகளில் வெவ்வேறு தேதிகளில் கொண்டாடப்படுகிறது. தமிழ் நாட்காட்டியின் படி, ஜனவரி 12 ஆம் தேதி (இன்று) மார்கழி அமாவாசையும், மூல நட்சத்திரமும் என்பதால், இன்று அனுமன் ஜெயந்தி தமிழ்நாட்டில் கொண்டாடப்படுகிறது.
சிறப்பு பூஜை
அனுமன் ஜெயந்தி அன்று கோயில்களில் சிறப்பு பூஜைகள் மற்றும் அபிசேஷம் ஏற்படாடு செய்யப்பட்டுள்ளது. பால், சந்தனம் மற்றும் பிற புனிதமான பொருட்கள் அனுமனுக்கு அபிஷேகம் செய்ய பயன்படுத்தப்படுகின்றன. சில கோயில்களில், அனுமனை வெண்ணெயால் அலங்கரித்திருப்பார்கள். மேலும் அனுமனுக்கு மிகவும் பிடித்த உணவான மெதுவடையால் மாலையை செய்தும் அனுமனை அலங்கரிப்பர்.
அனுமனுக்கான படையல்
சில பக்தர்கள் வீட்டிலேயே அனுமனுக்கு பூஜை செய்து பிராத்தனைகளை செய்வார்கள். அப்படி பூஜை செய்யும் போது, அனுமனுக்கு இனிப்புகள், பழங்கள் மற்றும் மெது வடை ஆகியவற்றை படைப்பார்கள். அதோடு அனுமனை பூஜிக்கும் போது, அவருக்கான ஸ்லோகங்கள், மந்திரங்கள் மற்றும் அனுமன் சாலிசா போன்ற அவருக்கு அர்ப்பணிக்கப்பட்ட பாடல்களையும் பாடுவார்கள்.
அனுமன் பிறப்பு
அனுமன் சிவபெருமானின் ஆசீர்வாதத்துடன் அஞ்சனை தேவி மற்றும் கேசரி ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார். சிவபெருமானின் ஆசீர்வாதத்தைப் பெற இந்த தம்பதிகள் சிவனை எண்ணி தவம் மேற்கொண்டனர். வாயு பகவான் சிவபெருமானின் ஆசீர்வாதங்களை சுமந்து வந்ததால், அனுமன் வாயு புத்திரன் என்று அழைக்கப்படுகிறார். அதோடு அனுமன் சிவபெருமானின் பதினொன்றாவது அவதாரம் என்று நம்பப்படுகிறது.
சிரஞ்சீவி அனுமன்
இருப்பினும், மாருதி, ஆஞ்சநேயர் என்று அழைக்கப்படும் அனுமன், ஸ்ரீராமரின் தீவிர பக்தர் என்று போற்றப்படுகிறார். இலங்கையில் அரக்கர்களின் மன்னரான ராவணனால் சிறைப்பிடிக்கப்பட்ட சீதையை மீட்பதில் அனுமன் முக்கிய பங்கு வகித்தார். சுவாரஸ்யமாக, அனுமன் ஒரு சிரஞ்சீவி. அதாவது அழிக்க முடியாதவர். இன்றும் இவர் இருக்கிறார். தெய்வீக சக்தியில் அசைக்க முடியாத நம்பிக்கையைக் கொண்டவர்கள் அனுமனின் இருப்பை உணர்கிறார்கள்.