திரிஷா, கதையின் நாயகியாக நடிக்க, அவருடன் ஜாக்கி பக்னானு, யோகி பாபு, சுரேஷ், சுவாமிநாதன், பூர்ணிமா பாக்யராஜ், சுவாமிநாதன், மதுமிதா… உள்ளிட்டோர் நடிக்க, “பிரின்ஸ்” மற்றும் “மார்வெல் வொர்த் புரொடக்ஷன்ஸ்” பட நிறுவனம் சார்பில் எஸ்.லஷ்மன் குமார் தயாரிப்பில் “மதுர” ஆர்.மாதேஷ் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் பேய்படம் தான் “மோகினி.”
கதைப்படி பிரபல சமையல் கலைஞரான இப்படக் கதையின்நாயகி த்ரிஷா, சென்னையில் வசித்து வருகிறார். யூடியூப்பில் தனது சமையல் வீடியோக்கள் மூலம் பிரபலமாகிறார். இந்த நிலையில் த்ரிஷாவின் தோழி ஒருவர், தனது காதலன் தன்னை விட்டு பிரிந்து லண்டன் சொல்வதாக கூறி வருத்தப்படுகிறாள். இதையடுத்து தனது தோழியின் காதலரான யோகிபாபுவை சந்திக்கும் த்ரிஷா தனது தோழியுடன் சேர்ந்து வாழச் சொல்லி அட்வைஸிக்கிறார்.
யோகி பாபு, தனது காதலியுடன் தான் சேர்ந்த வாழ வேண்டுமென்றால், த்ரிஷா தன்னுடன் லண்டன் வந்து தனக்கு சமையல் கற்றுத்தர வேண்டும் என்று கூறுகிறார். தனது தோழியின் வாழ்க்கை நலமுடன் இருக்க லேண்டும் என்பதற்காக யோகி பாபுவுடன், த்ரிஷா மற்றும் சுவாமிநாதன் இருவரும் லண்டன் செல்கின்றனர்.
அங்கு நாயகன் ஜாக்கி பக்னானியுடன் த்ரிஷாவுக்கு பழக்கம் ஏற்படுகிறது. பின்னர் அவர்களது நெருங்கிய பழக்கம் கொஞ்ச நாளில்காதலாகவும் மாறிவிடுகிறது. இந்த நிலையில், த்ரிஷா உள்ளிட்ட அவர்களது நண்பர்கள் அனைவரும் சுற்றுலா செல்கின்றனர். அங்கு த்ரிஷாவுக்கு ஓர் அதிசய சங்கு கிடைக்கிறது.
ஒருநாள் அந்த சங்கை த்ரிஷா ஊதும் போது, அந்த சங்கு வழியாக த்ரிஷாவின் உடலில் பேய் புகுந்து அந்த வீட்டில் இருக்கும் அனைவரையும் மிரட்டுகிறது. மேலும் த்ரிஷா மூலம் தனது ஆசைகளையும் நிறைவேற்றச் சொல்லி வற்புறுத்தும் அந்த பேய் சில கொலைகளையும் செய்கிறது.
இறுதியில் த்ரிஷா உடலில் புகுந்த அந்த பேய் யார்? எதற்காக அந்த கொலைகளை த்ரிஷாவை பயன்படுத்தி செய்கிறது? அதன் வாழ்க்கைக்கும், த்ரிஷாவுக்கும் என்ன சம்பந்தம்? என்பது உள்ளிட்ட இன்னும் பலவினாக்களுக்கு வித்தியாசமாகவும் விறு விறுப்பா கவும் விடையளிக்க முயற்சிக்கிறது “மோகினி” படத்தின் மீதிக்கதையும், களமும்!
கதையின் நாயகியாக த்ரிஷா, கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதையில் நடிக்கும் முதல் படம் இது. மொத்தப்படத்தையும் தனது தோள்களில் தூக்கி சென்றிருக்கிறார் என்று சொல்லலாம். கொடூரமான பேய்களுக்கு மத்தியில் அழகு பேயாக வந்து ரசிகர்களை கவர்கிறார் த்ரிஷா.
த்ரிஷா பெரிய அழகி… என்பது நமக்கு தெரியும். பேயாகவும் முழு மேக்கப்புடன் அழகாகவே வருகிறார். பேயிலும் அழகான பேயாக வந்து செல்கிறார்…. அம்மணி. வாவ்!
Mohini Tamil Review
த்ரிஷாவின் ஜோடியாக வரும் ஜாக்கி பக்னானி அவரது கதாபாத்திரத்திற்கு தேவையான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.
யோகி பாபு வின் காமெடியும், சுவாமிநாதன் மதுமிதாவின் காமெடிகளும் இப்படத்தில், எதிர்பார்த்த அளவிற்கு எடுபடவில்லை… என்பது கொஞ்சம் குறை.
மாஜி ஹீரோ சுரேஷ். பூர்ணிமா பாக்யராஜ், உள்ளிட்ட மற்ற கதாபாத்திரங்களும், அவர்களுக்கு கொடுத்த கதாபாத்திரத்தை செவ்வனே செய்திருப்பது ஆறுதல்!
ஆர்.பி.குருதேவ் ஒளிப்பதிவில் த்ரிஷாவும் லண்டனும் ஜொலித்திருக்கிறது.
விவேக் – மெர்வினின் பாடல்களும், அருள்தேவ்வின் பின்னணி இசையும், படத்திற்கும் கதைக்கும் பலம் சேர்க்கும்படி மிரட்டலாக இருக்கிறது.
லண்டனில் கொலை செய்யப்படும் ஒரு இந்தியப்பெண், த்ரிஷாவை லண்டன் வரவைத்து, த்ரிஷா மூலமாக தான் பழிவாங்க நினைப்பவர்களை பழிவாங்குவதை மையப்படுத்தி கதையை உருவாக்கி இருக்கிறார். ஆர்.மாதேஷ். சபாஷ், சரியான கற்பனை.
அதே போன்று, த்ரிஷாவை கொடூரமாக காட்ட இயக்குநர் விரும்பவில்லை என்பதும். லண்டனில் ஒரு தமிழ் பேய் படம் என்பதும் ஆறுதல்!
மற்றபடி, படத்தில், ஆங்காங்கே தென்படும் ஒரு சில லாஜிக் மிஸ்டேக்குகள்… சற்றே பலவீனம்… என்றாலும், த்ரிஷா, ஒரு மாதிரி அவற்றை எல்லாம் சமாளித்து விடுகிறார்.. என்றால் மிகையல்ல!
மொத்தத்தில், “பேய் படம் விரும்பும் ரசிகர்களையும், த்ரிஷா அபிமானிகளையும், ‘மோகினி’ யைப் – ‘போய் பாரு… நீ ‘என அனுப்பி வைக்கலாம்!”