இராணுவத்தில் படைவீரர்கள் தன்னிச்சையாக எந்த சட்டவிரோத செயற்பாடுகளிலும் ஈடுபடுவதில்லை என முன்னாள் தளபதியும், ஜனாதிபதி வேட்பாளருமான லெப்டினன்ட் ஜெனரல் மகேஸ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.
தேசிய மக்கள் கட்சி தேர்தல் காரியாலயத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே லெப்டினன்ட் ஜெனரல் மகேஸ் சேனாநாயக்க இவற்ரினை குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் கடந்த 2008 காலப்பகுதியில் வெள்ளை வாகனத்தில கடத்தப்பட்டவர்கள் தொடர்பில் பொது மகன் ஒருவரினால் ஊடகங்களுக்கு வெளிப்படுத்தப்பட்டிருந்த நிலையில்,
அக் காலப்பகுதியில் இராணுவத்தின் திட்டமிடல் அதிகாரியாகவே இருந்த தான், இந்த சம்பவங்கள் தொடர்பில் நான் அறிந்திருக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் இராணுவத்தினர் யாராவது சேவையில் இருக்கும் காலத்தில் இவ்வாறான நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தால் அது அவர்களின் கடமைக்கு அப்பால் சென்று மேற்கொண்ட சட்டவிரோத காரியமாகவே தான் பார்ப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
அத்துடன் எந்த படைவீரரும் இராணுவத்தில் இருக்கும் சாரதியும் தான் நினைத்ததை ஒருபோதும் செய்யப்போவதில்லை என்றும், அவர்களுக்கு யாராவது அறிவுறுத்தியோ அல்லது கட்டளையிட்டிருக்கவோ அவ்வாறு செய்ய கூறிருக்க வேண்டும் என்றும் மகேஸ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.
அதேபோன்று கடந்த காலங்களில் சட்டவிரோத சம்பவங்கள் இடம்பெற்றிருப்பதை யாராவது ஒப்புதல் வாக்குமூலம் வழங்குவதாக இருந்தால் அதனை விசாரணை மேற்கொள்ளும் குழுவிடம் அல்லது நீதிமன்றத்தில் தெரிவித்தே இந்த பிரச்சினை தீர்க்கவேண்டும்.மாறாக ஊடாகங்களுக்கு முன்வந்து இதனை வெளிப்படுத்துவது நாகரிகமான செயல் அல்ல என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் 2008 காலப்பகுதியில் இராணுவத்தில் இருந்த எந்த படைவீரரும் இவ்வாறான சட்டவிரோத செயல்களுக்கு ஒரு அணியாக செயற்படுவதற்கு வாய்ப்பிருக்கவில்லை எனக்கூறிய அவர், அவ்வாறு இடம்பெற்றிருந்தால், அது 2010க்கு பின்னரே இடம்பெற்றிருக்கவேண்டும் என்றும், ஏனெனில் 2010 முதல் 2015வரை நான் இராணுவத்தில் இருந்து விலகி இருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.