தயாரிப்பு – சத்ய ஜோதி பிலிம்ஸ்
இயக்கம் – ஆர்.எஸ்.துரை செந்தில்குமார்
இசை – விவேக் மெர்வின்
வெளியான தேதி – 15 ஜனவரி 2020
நேரம் – 2 மணி நேரம் 22 நிமிடம்
ரேட்டிங் – 2.75/5
பட்டாஸ் என்கிற சக்தி(மகன் தனுஷ்) நண்பர்களுடன் சேர்ந்து சிறு, சிறு திருட்டுகளில் ஈடுபட்டு வருகிறார். அவருக்கு எதிர்வீட்டில் இருக்கும் சாதனா (மெஹ்ரீன்) செய்யும் நக்கல் பிடிக்காமல் அவர் வேலை பார்க்கும் குத்துச்சண்டை பயிற்சி மையத்தில் இருக்கும் பதக்கங்கள், கேடயங்களை திருடுகிறார். இதனால் மெஹ்ரீனுக்கு பிரச்சனை ஏற்படுகிறது.
இதையடுத்து மெஹ்ரீன் மீது பாவப்பட்டு குத்துச் சண்டை பயிற்சி மையத்தில் இருக்கும் அவரின் சான்றிதழ்களை திருடச் செல்கிறார் தனுஷ். இதற்கிடையே கொலை வழக்கில் சிறையில் இருந்த கன்னியாகுமரி (சினேகா) வெளியே வந்ததும் நேராக வில்லன் நிலனை (நவீன் சந்திரா) கொலை செய்ய குத்துச் சண்டை பயிற்சி மையத்திற்கு வருகிறார்.
வந்த இடத்தில், தான் இறந்ததாக நினைத்த மகன் சக்தி உயிருடன் இருப்பதை பார்க்கிறார். சக்தி அடிமுறைக் கலையில் வல்லவரான தன் தந்தை திரவியம்பெருமாள்(தனுஷ்) பற்றி தெரிந்து கொள்கிறார். இதையடுத்து தந்தையை கொன்றவரை பழிவாங்க கிளம்புகிறார்.
அப்பா, மகன் கதாபாத்திரங்களில் தனுஷ் அம்சமாக நடித்துள்ளார். அதிலும் குறிப்பாக அப்பா திரவியம். சினேகா கன்னியாகுமரியாகவே வாழ்ந்துள்ளார். கலக்கப்போவது யாரு சதீஷின் காமெடி நம்மை சிரிக்க வைக்கிறது. அவர் கவுண்ட்டர் கொடுப்பது தான் சிறப்பு.
எதையும் ஜாலியாக எடுத்துக் கொள்ளும் பட்டாஸாகவும், பாரம்பரியமான திரவியமாகவும் தனுஷ் அனைவரையும் ஈர்க்கிறார். மெஹ்ரீன் பிர்சாதா முதல் பாதியில் சொதப்பலோ சொதப்பல். இன்னும் பயிற்சி தேவை. விவேக்-மெர்வின் இசை படத்திற்கு பக்கபலம்.
கதை ரொம்ப பழசு. நடப்பதை எளிதில் யூகிக்க முடிகிறது. இது தான் கதையின் மைனஸ். அடிமுறைக் கலையை அப்படியே காட்டாமல் மாஸாக காட்ட நினைத்து சொதப்பியுள்ளார் துரை செந்தில் குமார். பட்டாஸ்-சாதனா காட்சிகளை காமெடியாக காட்ட முயன்று தோற்றுள்ளார் இயக்குநர்.
பட்டாஸ் லைட்டா நமத்துப் போய்விட்டது.