பிரபல பாலிவுட் மற்றும் தமிழ்ப்பட நடிகை கங்கனா ரனாவத் தனக்கு கொரோனா தொற்று உறுதியானதாக தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
தமிழில் தாம்-தூம் திரைப்படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடித்து புகழ்பெற்றவர் பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத்.
இந்தியாவில், கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை முன்னெப்போதும் இல்லாத வகையில் காட்டுத் தீ போல் பரவி வருகிறது. இதனால், சாதாரண பொதுமக்கள் முதல் அரசியல்வாதிகள், சினிமா பிரபலங்கள் வரை லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
கங்கனாவிற்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதால், அவரது ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அவர் விரைவில் நலம் பெற வேண்டுமென வாழ்த்துகள் தெரிவித்துள்ளனர்.
நான்கு தேசிய விருக்களைப் பெற்ற கங்கனா, சமீபத்தில் மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றுப் படமான ‘தலைவி’ திரைப்படத்தில் அவருடைய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் கடந்த மாதம் திரையரங்குகளில் வெளியாகவிருந்த நிலையில், கொரோனா காரணமாக படத்தின் ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு, நடிகை கங்கனா ரனாவத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கு நிரந்தரமாக முடக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.