ஐ.நா மனித உரிமைகள் பேரவை அமைந்திருக்கும் ஜெனிவா நகருக்கு நிகராக, ஒட்டுமொத்த இலங்கையின் கவனத்தையும் ஈர்த்திருக்கிறது, ‘கேப்பாப்புலவு’.
முள்ளிவாய்க்காலுக்குக் கூப்பிடு தொலைவில் இருக்கிறது இந்தக் கிராமம். ‘கேப்பாப்புலவு எமது நிலம்… எமது நிலத்தைத் திருப்பிக் கொடு’ என்கிற ஒற்றைக் கோரிக்கையுடன், இராணுவ முகாமை முற்றுகையிட்டிருக்கிறார்கள்,
கேப்பாப்புலவு மக்கள். அதிலும் குறிப்பாகப் பெண்கள்.ஆபத்து கூடுதலான இராணுவப் பிராந்தியத்தில், கொட்டுகிற மழையிலும் நகர்ந்து விடாமல் நின்று கொண்டிருக்கிற கேப்பாப்புலவு சகோதரிகளின் போராட்டம், சர்வதேசத்தின் மீதும் ஐ.நா மீதும் அவர்கள் நிறைவேற்றியிருக்கிற நம்பிக்கையில்லாத் தீர்மானம்.
உலகமும் ஐ.நா-வும் தங்களுக்கு நியாயம் வழங்கி விடும் என்று எட்டு ஆண்டுகளாகக் காத்திருந்தவர்கள் அவர்கள். கேப்பாப்புலவு என்றால், கேப்பை விளைகிற நிலம். இப்போது விளைகிறதா, இல்லையா தெரியவில்லை. ‘வீரம் விளைகிற நிலம்’ என்பது மட்டும் நிச்சயமாகத் தெரிகிறது.
சொந்த இனம், இராணுவத்தால் அழிக்கப்பட்ட நிலத்தின் காற்று தழுவுகிற தூரத்திலேயே, இராணுவ, விமானப்படை முகாம்களைப் பெண்கள் முற்றுகையிட்டிருப்பது உலக வரலாற்றில் ஓர் அரிய பதிவு.
சென்ற வாரம், விமானப்படை முகாமை முற்றுகையிட்டிருந்த சகோதரிகளை நேரில் சந்தித்த மாலைப்பொழுதை வாழ்வின் எந்தக் கட்டத்திலும் நான் மறக்க முடியாது.
இருட்டத் தொடங்கியிருந்த அந்த நேரத்தில், ஈரக்காற்று உடலைத் தழுவ, காற்று வருகிற திசையைப் பார்க்கிறேன். அது நந்திக்கடல் காற்று என்பது அதுவரை தெரியாது எனக்கு! ‘இங்கிருந்து 500 மீட்டரில், முகாமுக்குப் பின்னால்தான் நந்திக்கடல் கிடக்கிறது’ என்கிறார்கள் கேப்பாப்புலவு சகோதரிகள்.
அதன்பிறகுதான் கவனிக்கிறேன்… பரந்து விரிந்து கிடக்கிற நந்திக்கடலை நந்தி மாதிரி மறைத்துக் கொண்டிருக்கிறது விமானப்படை முகாம். மாபெரும் மர்மமொன்றின் மையப் புள்ளியான நந்திக்கடலின் அருகில் நின்று கொண்டிருக்கிற உணர்வே சிலிர்க்க வைக்கிறது.
விவசாயம் செய்ய இயலாத காலங்களில், நந்திக்கடலில் போய் மீன்பிடித்தவர்கள் கேப்பாப்புலவு மக்கள். அது, அவர்களின் தாய்மடி. இப்போது, நந்திக்கடலுக்கும் அவர்களுக்கும் இடையே தடுப்புச் சுவர் மாதிரி நிற்கிறது விமானப்படை முகாம்.
சொந்த நிலத்தைக் கேட்டுப் போராடுகிற மக்களை ‘அத்துமீறி நுழைந்தால் சுடுவோம்’ என்று போர்டு வைத்து அச்சுறுத்துகிறது. அத்துமீறி நுழைந்திருப்பது இவர்களா, அவர்களா?சகோதரிகளை வாழ்த்திவிட்டு, வவுனியாவுக்குப் புறப்படுகிறோம்.
சில நூறு மீட்டர் தொலைவில் தடுத்து நிறுத்தும் இராணுவப் போலீஸார், மாற்றுப்பாதையில் போகச் சொல்கின்றனர். பிரதான சாலையிலிருந்து திரும்பி, அடர்ந்த காட்டுப் பகுதிக்குள் புதிதாக அமைக்கப்பட்டிருக்கிற மண்பாதையை அடைகிறது வாகனம்.
வழி நெடுக, பிரமாண்டமான இராணுவ முகாம்கள், இராணுவ ரெஜிமென்ட்கள், இராணுவ அலுவலகங்கள், இராணுவ மருத்துவமனை, கடற்படை மற்றும் விமானப்படை முகாம்கள். அந்தக் காடு முழுக்க இராணுவம்… இராணுவம்…, இராணுவம். இராணுவத்தைத் தவிர வேறெதுவும் இல்லை.
இனப்படுகொலை நிகழ்ந்து எட்டு ஆண்டுகள் ஆகிவிட்டன. உச்சக்கட்ட இனப்படுகொலை நடந்த முள்ளிவாய்க்காலுக்கும் நந்திக்கடலுக்கும் அருகிலேயே, அதற்குப் பிறகும் இராணுவம் நிலைகொண்டிருப்பது நிறைய கேள்விகளை எழுப்புகிறது.
மிச்சம் மீதியிருக்கிற தடயங்களை அழித்தொழிக்கிற வேலை நடக்கிறதா? அதனால்தான், அந்தப் பக்கம் என்ன நடக்கிற தென்பதே யார் கண்ணிலும் பட்டுவிடாதபடி சாலையை மறித்து நிற்கிறார்களா? நந்திக்கடல் மர்மத்தைப் போலவே நீடிக்கிறது இந்த மர்மமும்!
2008 டிசம்பரில் இராணுவத் தாக்குதல் தீவிரமடைந்ததையடுத்து, கேப்பாப்புலவு மக்கள் தங்கள் பகுதியிலிருந்து வெளியேறினர். 2009-ல் அவர்களை மெனிக் பார்ம் முள்வேலி முகாமுக்கு அனுப்பியது இராணுவம்.
போருக்குப் பிறகு தங்கள் சொந்த கிராமங்களுக்குத் திரும்ப விரும்பிய அவர்களைத் தடுத்த இராணுவம் அந்தப் பகுதி முழுக்க வெடிபொருட்கள் கிடப்பதாகவும், அவை அகற்றப்படும் வரை அங்கே போக வேண்டாம் என்றும் எச்சரித்தது.
அகற்றப்படுவது வெடி பொருட்களா, கொல்லப்பட்டோர் உடல்களின் மிச்ச சொச்சமா என்பது மர்மமாகவே இருக்கிறது.
கேப்பாப்புலவு மக்களில் ஒரு சிலருக்கு நிலங்கள் திருப்பிக் கொடுக்கப்பட்டு விட்டதாகவும், பெரும்பாலான மக்கள் தொடர்ந்து போராடி வருவதாகவும் இப்போது செய்தி வருகிறது.
இராணுவம் ஆக்கிரமித்திருக்கும் தமிழர் நிலத்தின் பரப்பு 65 ஆயிரம் ஏக்கருக்கும் கூடுதல். இந்த 8 ஆண்டுகளில், சுமார் மூன்றாயிரம் ஏக்கர் மட்டுமே விடுவிக்கப்பட்டிருக்கிறது. ‘காணிகளை மக்களிடம் திரும்ப ஒப்படைத்து வருகிறோம்’ என்று கூச்சநாச்சமின்றிப் பேச இலங்கையால் எப்படி முடிகிறது?
கேப்பாப்புலவு இராணுவப் பாசறை அல்ல! அது எமது பாட்டன் பூட்டன் முப்பாட்டன் ஆண்ட பூமி. எம் சொந்த மண்ணில் நாம் வாழ ஏன் இந்தத் தடை’ என்பது கேப்பாப்புலவு பூர்வீக மக்களின் கேள்வி.கேப்பாப்புலவு எழுப்புகிற இந்தக் கேள்வி, ஜெனிவாவுக்கும் பொருந்துகிறது.
போர்க்குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் தொடர்பாக சர்வதேச நீதிபதிகளை உள்ளடக்கிய விசாரணை நடத்தப்பட வேண்டும்’ என்று ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு 18 மாதங்கள் ஆகிவிட்டன.
இலங்கையும் சேர்ந்துதான் அந்தத் தீர்மானத்தைக் கொண்டுவந்தது. ஜெனிவாவில் அந்தத் தீர்மானத்தை நிறைவேற்றி விட்டு கொழும்பு திரும்பிய உடனேயே, ‘சர்வதேச நீதிபதிகள் என்கிற பேச்சுக்கே இடமில்லை’ என்று மறுத்து, தனது நம்பகத்தன்மையின் லட்சணத்தை உலகறியப் பறைசாற்றியது இலங்கை.
18 மாதங்கள் கழித்து, ‘சர்வதேச விசாரணையை இலங்கை இழுத்தடிப்பது’ குறித்து ஐ.நா மனித உரிமை ஆணையாளர் ஹுசெய்ன் கவலை தெரிவித்திருக்கிறார்.
இலங்கை அந்தக் கோரிக்கையைக் குழிதோண்டிப் புதைக்கப் பார்க்கிறது’ என்கிற நிஜத்தை அறியாதவரல்ல அவர். உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவது இலங்கைக்குக் கைவந்த கலை. இப்போதும் அதையேதான் செய்கிறது.
கொழும்பில் வைத்து ‘சர்வதேச நீதிபதியையெல்லாம் அனுமதிக்கவே மாட்டோம்… படையினரை விசாரிக்கவே மாட்டோம்’ என்று வாய்கிழியப் பேசுகிற இலங்கை, ஜெனிவா வந்ததும் வாலைச் சுருட்டிக்கொண்டு, 2015-ம் ஆண்டு தீர்மானத்தை அமுல்படுத்த அவகாசம் கேட்கிறது.
அதைக்கூட, மூன்றாம் நபர்களை வைத்துக் கேட்கிறது. எட்டு ஆண்டுகள் ஆகிவிட்டன இனப்படு கொலை முடிந்து! அதைப்பற்றி விசாரிப்பதற்கு இலங்கைக்குப் பலமுறை அவகாசம் கொடுக்கப்பட்டு விட்டது. ஒருமுறை கூட, உருப்படியான நடவடிக்கை எதையும் அது எடுத்ததில்லை. அதன் கையிலிருக்கிற ஒரே துருப்புச்சீட்டு, அவகாசம் முடிகிற நேரத்தில் மீண்டும் அவகாசம் கேட்பதுதான்!
இப்படி தள்ளிப்போடுவதன் மூலம், நீதிக்கான கோரிக்கையைக் காலப்போக்கில் நீர்த்துப்போக வைத்துவிடமுடியும் என்று இலங்கை நம்புகிறது. தடயங்களை மறைப்பதும், தமிழின அழிப்புக்கு நீதி கேட்கும் போராட்டங்களை முனைமழுங்கச் செய்வதுமே அதன் நோக்கம்.
இப்போது இன்னொரு 18 மாத கால அவகாசத்தை இலங்கைக்குக் கொடுத்தால், இந்த 18 மாதங்கள் முடிகிற நேரத்தில் இன்னொரு 18 மாத அவகாசம் கேட்பதைத் தவிர வேறெதையும் செய்யப் போவதில்லை அது.
பதினெட்டு ஆண்டுகள் கழித்தும் இதுதான் நடக்கும். மகிந்த ராஜபக்ச செய்தது இனப்படுகொலைதான் என்பது தெரியாமலா, ‘நாங்கள்தான் மகிந்தனை சர்வதேச மின்சார நாற்காலியிலிருந்து காப்பாற்றினோம்’ என்று மார்தட்டிக் கொண்டிருக்கிறார்கள் அதிபர் மைத்திரிபாலாவும் பிரதமர் ரணிலும்!
அதிபரும் பிரதமரும் இப்படியென்றால், சிங்கள அறிவுஜீவிகளின் பங்கு இன்னும் மோசம். ‘‘நடந்ததையே பேசிக் கொண்டிருந்தால் நாட்டின் ஒற்றுமை, நல்லிணக்கமெல்லாம் நாசமாய்ப் போய்விடும்’’ என்கிறார்கள் அவர்கள்.
கொல்லப்பட்ட அப்பாவித் தமிழர்கள் ஒருவர், இருவரல்ல! ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள். அநியாயமாகக் கொல்லப்பட்ட அவர்களையும், இரக்கமில்லாமல் சீரழிக்கப்பட்ட சகோதரிகளையும் மறந்துவிட்டு, சிங்களக் குற்றவாளிகளுடன் சேர்ந்து கோலாகலமாகக் கும்மியடிக்கச் சொல்கிறார்களா?‘
ரோம் சாசனத்தில் கையெழுத்துப் போடாததால், சர்வதேச நீதிமன்றத்தில் இலங்கையை நிறுத்த முடியாது’ என்கிற வாதம் அபத்தமானது. எதற்குமே மாற்று வழியுண்டு. இதற்கும் ஒரு மாற்றுவழி இருப்பதை, வடமாகாண முதல்வர் நீதியரசர் விக்னேஸ்வரன் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பே சுட்டிக்காட்டினார். ‘
சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயத்தை அமைத்து, அதன் முன் இலங்கையை நிறுத்த முடியும்’’ என்று அவர் சொன்னார்.
குற்றவாளிகளைக் காப்பாற்றினால்தான் ஒருமைப்பாட்டைப் பாதுகாக்க முடியும் என்கிற நிலையில் இருக்கிற ஒரு நாட்டுக்கு, அந்த நாசமாய்ப் போன ஒருமைப்பாடு எதற்கு?
புகழேந்தி தங்கராஜ்