தென் இலங்கையின் அரசியல் சூழல் வெகுவாக மாற்றமடைந்து வருகின்றது. அமைச்சரவையை மாற்றம் செய்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களுக்கும் முக்கிய அமைச்சுப் பொறுப்புக்களை வழங்கவுள்ளதாக ஜனாதிபதி கூறிவந்த நிலையில் அதுவும் நடக்கப்போவதில்லை என்ற நிலைமை ஏற்பட்டுள்ளது.
அமைச்சரவை மாற்றம் என்பதானது முக்கியமாக நிதி அமைச்சை ஐக்கிய தேசியக் கட்சியிடமிருந்து மீளப் பெற்று அதை சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த ஒருவருக்கு வழங்குவதே ஜனாதிபதியின் நோக்கமாக இருந்தது. அதன் ஊடாக ஏனைய அமைச்சுக்களையும் ஓரளவுக்கு கட்டுப்படுத்தும் பொறிமுறையை ஏற்படுத்துவதே ஜனாதிபதியின் திட்டமாக இருந்தது.
ஜனாதிபதியின் நோக்கத்தைத் தெரிந்துகொண்ட ஐக்கிய தேசியக் கட்சியினரோ, அமைச்சரவை மாற்றத்தையும், முக்கியமாக நிதி அமைச்சை ஐக்கிய தேசியக் கட்சியைவிட்டு கைவிடுவதையும் விரும்பவில்லை.
அதற்குக் காரணம் தற்போதைய நல்லாட்சி அரசாங்கத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் 105 நாடாளுமன்ற உறுப்பினர்களும், சுதந்திரக் கட்சியின் சார்பில் 42 நாடாளுமன்ற உறுப்பினர்களுமே அமைச்சரவையுடன் இணைந்துள்ளனர். அந்தவகையில் பெரும்பான்மையாக இருக்கும் தம்மிடமே முக்கிய அமைச்சுக்கள் அதிலும் முக்கியமாக நிதி அமைச்சு இருக்க வேண்டும் என்றும், 19ஆவது திருத்தச் சட்டத்தின் பிரகாரம், அமைச்சரவை மாற்றத்தை தனியே ஜனாதிபதி மட்டும் முடிவு செய்ய முடியாது என்பதுடன் பிரதமரும் ஒப்புதல் வழங்க வேண்டும் என்றவகையில், ஜனாதிபதியின் இந்த முடிவுக்கு பிரதமர் ஒப்புதல் அளிக்கக் கூடாது என்றும் ஐக்கிய தேசியக் கட்சியினர் வலியுறுத்துகின்றனர்.
ஐக்கிய தேசியக் கட்சிக்கு நிதி அமைச்சை கைமாற்றுவதில் இருக்கின்ற மற்றுமொரு பாரிய பிரச்சினைதான், மத்திய வங்கி பிணைமுறை சர்ச்சையாகும். நிதி அமைச்சு கைமாறி புதிய நிதி அமைச்சர் இந்த பிணைமுறி விவகாரத்தை மேலும் சர்ச்சைக்குரியதாக மாற்றினால் அது ஐக்கிய தேசியக் கட்சிக்கும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் பாரிய பிரச்சினையாக மாறிவிடும் என்ற அச்சமும் இருக்கவே செய்கின்றது.
தொடர்ச்சியாக நிதி அமைச்சை ஐக்கிய தேசியக் கட்சி வைத்திருக்க விரும்புவதற்கு மற்றுமொரு காரணமும் இருக்கவே செய்கின்றது. மத்திய வங்கி பிணை முறி விவகாரத்தில் ஏற்பட்டுள்ள சர்ச்சைக்கு அந்தப் பணத்தை மீளவும் திரைசேறிக்கு வழங்குவதன் ஊடாக தீர்வொன்றைக் காண்பதற்கு மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் ஐக்கிய தேசியக் கட்சியின் வட்டாரங்கள் கூறுகின்றன.
அடுத்ததாக அம்பாந்தோட்டையில் சீனாவுக்கு 15000 ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு வழங்குவது, எயார் லங்கா நிறுவனத்தை விற்பனை செய்வது போன்ற பாரிய ஒப்பந்தங்களிலும், வெளிநாட்டு முதலீட்டாளர்களை இலங்கைக்கு அழைப்பது தொடர்பான பேச்சுவார்த்தைகளிலும், ஒப்பந்தங்களிலும் ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியமான தரப்பினர் ஈடுபட்டுள்ளதால் அக்காரியங்களை நகர்த்துவதற்கு நிதி அமைச்சு கைவசம் இருக்க வேண்டியது அவசியம் என்றும் அவர்கள் விரும்புகின்றனர். இதே திட்டமே சுதந்திரக் கட்சியினரிடமும் இருக்கின்றது.
இவ்வாறான நிலையிலேயே ஜனாதிபதி அமைச்சரவையை மாற்றுவதற்கு விரும்பினாலும் அவரால் அது முடியாத காரியமாகியிருக்கின்றது. ‘முடிந்தால் ஜனாதிபதி அமைச்சரவை மாற்றத்தை செய்து பார்க்கட்டும்’ என்று ஜனாதிபதிக்கு சவால் விடுக்கின்ற வகையிலேயே ஐக்கிய தேசியக் கட்சியின் நிலைப்பாடு இருக்கின்றது.
இந்த இழுபறிகளிடையேதான் கடந்த வாரம் ஜனாதிபதியும், பிரதமரும் இவ்விடயம் தொடர்பாக கலந்துரையாடினார்கள். இறுதியில் இந்த ஆண்டு முடியும்வரை அமைச்சரவை மாற்றம் நடைபெறாது என்று அறிக்கை வெளியிட்டார்கள். முதல் தடவையாக 19ஆவது திருத்தச்சட்டம் ஜனாதிபதிக்கு சவால் விடுகின்ற சந்தர்ப்பம் இதுவாகும். நல்லாட்சி அரசாங்கத்திற்காக இரு பிரதான கட்சிகளின் இணக்க ஒப்பந்தமும் இவ் ஆண்டு செப்டெம்பர் மாதம்வரையே இருக்கின்றது என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
ஜனாதிபதியும் பிரதமரும் சந்தித்தபோது, அரசியலமைப்பு திருத்தம் தொடர்பாகவும் கலந்துரையாடி இருக்கின்றனர். அதில் புதிய அரசியலமைப்பு என்பதை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஏற்றுக்கொள்ளவில்லை. மாறாக அரசியலமைப்பு திருத்தம் என்றவாறாகவே தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு முன்வைக்கப்பட வேண்டும் என்றும், சர்வஜன வாக்கெடுப்புக்கு போகாத வகையில் திருத்தச் சட்டத்தை நிறைவேற்றுவதற்கு ஏதுவாக வரைபுகள் இருக்க வேண்டும் என்றும் இருவராலும் இணக்கம் காணப்பட்டுள்ளது.
இவற்றை பார்க்கும்போது தற்போது இலங்கை அரசியல் யாப்பில் இருக்கின்ற 13ஆவது திருத்தச் சட்டத்தையே தற்போதைய தேவைக்கு ஏற்ப திருத்தம் செய்ய பிரதான கட்சிகள் இரண்டும் விரும்புவதைக் காணக்கூடியதாக இருக்கின்றது. ‘புதிய அரசியலமைப்பிற்கு சர்வஜன வாக்கெடுப்பு நடத்தி பெரும்பான்மை சிங்கள மக்களின் ஒப்புதலை பெற்றுக்கொள்ள வேண்டும்’ என்று இதுவரை எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் கூறிவந்த நிலைப்பாட்டையும், பிரதான கட்சிகள் மறுத்துள்ளன.
அதேபோல் ‘எந்தவகையிலும் படையினரை விசாரிக்கப்போவதில்லை’ என்று ஜனாதிபதியும், பிரதமரும் தெளிவாக கூறியுள்ள நிலையில், போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக தமிழ்மக்கள் கோரிக்கை விடுக்கும் நீதியான விசாரணை நடைபெறாது என்பதை இவர்கள் உறுதி செய்துள்ளனர்.
மறுபக்கத்தில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் 45 நாட்களையும் தாண்டி தொடர்ச்சியாக நீதி கோரி போராடிக் கொண்டிருக்கின்றார்கள். காணாமல் ஆக்கப்பட்டோர் உயிரோடு இல்லை என்று அரசாங்கம் சாக்குப்போக்குகளை கூறுவதை தமிழ்மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால் அரசாங்கமோ, காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பாக விசாரணைகளை முன்னெடுக்காமலே அவர்களை இறந்து போனவர்களாக ஏற்றுக்கொண்டு மரணச் சான்றிதழ்களை பெற்றுக்கொள்ளுமாறு தொடர்ந்து கூறிவருகின்றது.
குறைந்தபட்சம் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பாக தமிழ்மக்களால் ஆணைக்குழுக்களிடம் செய்யப்பட்ட முறைப்பாடுகளையேனும் விசாரிக்க, இலங்கை அரசாங்கம் தயாராக இல்லை. அரசாங்கம் கூறுவதுபோல் காணாமல் போனவர்களாக கூறப்படுகின்றவர்கள் அனைவரும் இறந்துவிட்டதாக ஏற்றுக்கொள்ள முடியாத மனநிலையில் உறவினர்கள் ஏங்கிக் கொண்டு இருக்கின்றார்கள்.
எங்கோ ஒரு முகாமில் அல்லது மர்மமான இடத்தில் தமது உறவுகள் உயிருடன் வைக்கப்பட்டிருக்கலாம் என்றும், அல்லது அவர்களுக்கு என்ன நடந்தது என்பதை ஒரு விசாரணையின் ஊடாக அரசாங்கம் உறுதிப்படுத்தினால் அத்தகையதொரு முடிவை தாம் ஏற்றுக்கொள்ள தயாராக இருப்பதாகவும் தமிழ் மக்கள் கூறுகின்றபோதும், தமிழ் மக்களின் குரலுக்கு அரசாங்கம் செவி சாய்த்து நியாயமான ஒரு முடிவுக்கு வருவதற்கு தயாராக இல்லை.
இவ்விடயத்தில் அரசாங்கத்தை செவி சாய்க்க வைப்பதற்கும், விசாரணைகளை முன்னெடுக்கச் செய்வதற்கும், அரசுடன் நெருக்கமாக இருக்கும் சம்பந்தன் போன்றவர்கள் அதிகமான அக்கறையுடன் செயற்பட வேண்டிய காலகட்டம் இதுவாகும்.
அரசாங்கம் செய்வதையெல்லாம் தமிழ் மக்கள் ஏற்றுக்கொண்டும், சகித்துக் கொண்டும் இருப்பது அடிமை வாழ்வுக்கு ஒப்பானதாகும். அதற்காக மீண்டும் அரசுக்கு எதிராக ஆயுதம் ஏந்தி போராடுவதுதான் சரியென்றும் கூறமுடியாது. இரண்டுக்குமிடையே தமது உரிமைகளுக்காகவும், தமக்கான நீதிக்காகவும், சமத்துவமான வாழ்க்கைக்காகவும் தமிழ்மக்கள் என்ன செய்ய வேண்டும் என்பதையிட்டு நிதானமாக சிந்திக்க வேண்டிய அவசியத்தை உணராதவர்களாகவே இருக்கின்றார்கள்.
தமிழ் மக்களை சிந்திக்கவிடாது, அவர்கள் மீது உளவியல் யுத்தத்தையும், கலாசார சீரழிவு தாக்குதல்களையும், போதை எனும் அரக்கனையும் ஏவி விடப்படுகின்றதாகவே, வடக்கு கிழக்கில் நாளாந்தம் நடைபெறுகின்ற சம்பவங்கள் சந்தேகங்களை எழச் செய்கின்றன.