உலகம் முழுவதிலும் வாழ்ந்து வரும் புத்த மதத்தினர், கவுதம புத்தர் பிறந்தநாளை ‘வேசக்’ என்ற புனிதநாளாக கொண்டாடி மகிழ்கின்றனர். புத்தர் பிறந்தநாளாகவும், ஞானம் பெற்று முக்திப்பேற்றினை எய்திய தினமாகவும், புத்த மதத்தினரின் புத்தாண்டாகவும் ‘வேசக்’ தினம் கருதப்படுகிறது.
அவ்வகையில், இந்த ஆண்டின் வேசக் தினத்தையொட்டி வரும் மே மாதம் 12-ம் தேதியில் இருந்து 14-ம் தேதிவரை புத்தமதம் தொடர்பான மாபெரும் சர்வதேச மாநாடு ஒன்றை புத்த மதத்தினர் அதிகமாக வாழும் இலங்கையில் நடத்த ஐக்கிய நாடுகள் சபை தீர்மானித்தது.
புத்த மதத்தவர்கள் பரவலாக வாழ்ந்துவரும் நூற்றுக்கும் அதிகமான நாடுகளை சேர்ந்த சுமார் 400 முக்கிய விருந்தினர்கள் பங்கேற்கும் இந்த மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்வார் என இலங்கை நாட்டின் நீதித்துறை மந்திரி விஜேயதாஸ ராஜபக்சே இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.