ஜெயலலிதாவுக்கு சொந்தமான சிறுதாவூர் பங்களா அருகே ஆண் எலும்புக்கூடு கண்டுபிடிக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் திருப்போரூர் அருகே உள்ள சிறுதாவூரில், ஜெயலலிதாவுக்கு சொந்தமான பங்களா உள்ளது. அங்கு தன்னுடைய தோழியான சசிகலாவுடன் அவ்வப்போது சென்று தங்கிவந்தார். ஆனால், கடந்த சில ஆண்டுகளாக, சிறுதாவூர் பங்களாவுக்கு ஜெயலலிதா செல்லவில்லை. இந்நிலையில், ஜெயலலிதா உடல்நலக்குறைவால் உயிரிழந்ததால், சிறுதாவூர் பக்கம் யாருமே செல்வதில்லை என்று கூறப்படுகிறது. சமீபத்தில், சிறுதாவூர் பங்களா அருகே தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பாக பேசப்பட்டது. அந்த விபத்தானது, இயற்கையாக நடந்ததா அல்லது முக்கிய ஆவணங்களை எரிப்பதற்காக நடந்ததா என்ற சந்தேகம் எழுந்தநிலையில், சிறுதாவூர் மங்களா அருகில் தனியாருக்கு சொந்தமான இடத்தில், எலும்புக்கூடு இருப்பதாக காவல்துறைக்கு தகவல் வந்தது. அதனை அடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற திருப்போரூர் காவல்துறை, எலும்புக்கூட்டை ஆய்வு செய்தனர். அப்போது அங்கு மக்கிய நிலையில் கிடந்த நீல நிற சட்டை மற்றும், பச்சை நிற டவுசர் இருந்ததால் அது ஆணின் எலும்புக்கூடாக இருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்னர் எலும்புக்கூட்டை கைப்பற்றிய போலீஸார் பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அங்கு கைப்பற்றப்பட்ட பொருட்களை, தடயவியல் துறைக்கு அனுப்பியுள்ளனர். சிறுதாவூர் பங்களா அருகில் எலும்புக்கூடு இருந்ததால், பங்களா காவலாளிகளிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர். கடந்த ஏப்ரல் மாதம் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட் பங்களா காவலாளி படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் சிறுதாவூர் பங்களா அருகில் எலும்புக்கூடு இருந்ததால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஜெயலலிதாவின் பங்களா அருகே எலும்புக்கூடு: தொடரும் மர்மம்..!
Loading...
Loading...
Loading...