இனப்பிரச்சினையைத் தீர்க்கும் வகையில், 13ஆவது திருத்தச்சட்டத்தின் ஊடாக அதிகாரப் பரவலாக்கலுக்கு என்றும் தயராகவே உள்ளோம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்று வரும் வரவு செலவுத்திட்டத்தின் குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது தொடர்ந்தும் உரையாற்றிய அவர், “பொதுத் தேர்தலொன்றுக்கு செல்லப் போவதில்லை என்று ஜனாதிபதி தெரிவித்திருந்தார்.
இவர் இந்த நாடாளுமன்றுக்கு தேசியப் பட்டியல் ஊடாக வந்தவர். நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவினால்தான் ஜனாதிபதியாகியுள்ளார்.
ஜனாதிபதித் தேர்தலில் 69 இலட்சம் மக்களின் வாக்குகளைப் பெற்று ஜனாதிபதியானவரும் பிரதமராக தெரிவு செய்யப்பட்டவரும் மக்களால் விரட்டியடிக்கப்பட்டார்கள்.
இந்த நிலையில், ஜனாதிபதி தேர்தலை நடத்தப்போவதில்லை என்றுக் கூறியதையிட்டு நாம் வியக்கப்போவதில்லை. ஜனாதிபதி தேர்தலை நடத்தப்போவதில்லை என்றுக் கூறியவுடன், இங்கே சிலர் கரகோஷம் எழுப்பினார்கள். இன்னும் இவர்கள் அடிமைகளாகத்தான் இருக்கிறார்கள்.
இவர்கள் கோட்டாபய ராஜபக்ஷ, மஹிந்த ராஜபக்ஷ, பசில் ராஜபக்ஷவுக்கு என்ன நடந்தது என்பதை சிந்திக்க வேண்டும்.
மக்களின் ஆணைக்கு மதிப்பளிக்காவிட்டால் எவ்வளவு விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று இவர்கள் யோசிக்க வேண்டும்.
எனவே, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கூறிய கருத்தை மாற்றியமைத்து, உடனடியாக பொதுத் தேர்தலொன்றுக்கு செல்ல வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். 220 இலட்சம் மக்களும் இதனைத்தான் எதிர்ப்பார்க்கிறார்கள். இதுதான் ஜனநாயகமாகும்.
அவர் ஜனாதிபதியாக இன்று ஆசனத்தில் அமர்வதற்கு மக்களின் தன்னெழுச்சிப் போராட்டம்தான் காரணமாகும். எனவே, அவர் இந்த மக்களின் ஆணைக்கு செவி சாய்க்க வேண்டும்.
பொதுமக்களால் மேற்கொள்ளப்பட்ட அமைதிப்போராட்டம், எவ்வாறு வன்முறையாக மாறியது? அலரிமாளிகையில் கூடிய தரப்பினரால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை அடுத்துதான் வன்முறை வெடித்தது.
மாலையில் வெடித்த வன்முறை பிழையென்றால், காலையில் இடம்பெற்ற வன்முறையும் பிழைதான்.
இதனால் நாம் ஒரு நாடாளுமன்ற உறுப்பினரைக்கூட இழந்துள்ளோம். இவை பயங்கரவாதச் செயற்பாடுகளாகும்.
எனவே, இந்த இரண்டு தரப்பினருக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அமைதியான மக்கள் போராட்டத்திற்கு இந்நாட்டில் இடமுள்ளது. இதற்கு நாம் தலைமைத்தாங்குவோம்.
ஆனால், எவரேனும் ஒரு தரப்பினர் வன்முறைகளில் ஈடுபட்டால் அதற்கெதிராக நாம் அனைவரும் ஒன்றிணைந்து சட்ட நடவடிக்கைகளை எடுத்தே ஆக வேண்டும்.
இந்நாட்டில் பொருளாதாரக் குற்றங்களைப் புரிந்த அந்தக் குடும்பத்திற்கு எதிராக, மக்கள் கிளர்ந்தெழுவதை யாராலும் தடுக்க முடியாது. இது அவர்களின் ஜனநாயக உரிமையாகும்.
அதிகாரப் பரவலாக்கல் தொடர்பாக ஜனாதிபதி கேள்வி கேட்டார். மொட்டுக் கட்சியினர்தான் வெளிநாட்டிற்குச் சென்றால் 13 பிளஸ் என்றும் உள்நாட்டில் 13 மைனஸ் என்றும் கூறிவருகிறார்கள்.
நாம் 13ஆவது திருத்தச்சட்டத்தின் ஊடாக அதிகாரப் பரவலாக்கலுக்கு என்றும் தயராகவே உள்ளோம்.
வரவு- செலவுத்திட்டத்தின் இறுதி வாக்கெடுப்பில் பின்னர், இனப்பிரச்சினையைத் தீர்க்கும் வகையில், அதிகாரப் பரவலாக்கலுக்கு நாம் தயார்.
ஆனால், ஜனாதிபதி கூறியதைப் போன்று 75 ஆவது சுதந்திரத் தினத்திற்கு முன்னர் இந்தப் பிரச்சினையைத் தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அப்படியானால், இந்தப் பேச்சுவார்த்தைக்கு தலைமைத்தாங்கவும் ஐக்கிய மக்கள் சக்தி தயாராகவே உள்ளது” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.








































