தியத்தலாவை – நரியாகந்தை ஓட்டப் பந்தய திடலில் இடம்பெற்ற விபத்து தொடர்பில் இரண்டு வாகன சாரதிகள் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட இருவரையும் எதிர்வரும் 30ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பண்டாரவளை நீதவான் உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாத்தறை மற்றும் பேராதனை பகுதிகளைச் சேர்ந்த 36 மற்றும் 47 வயதுடையவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் சந்தேகநபர்கள் இரண்டு பேரும் காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலே நேற்று(22.04.2024) தியத்தலாவை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தியத்தலாவை நரியாகந்தை ஓட்டப்பந்தய திடலில் இடம்பெற்ற Fox Hill Super Cross 2024 ஓட்டப் பந்தயத்தில் ஏற்பட்ட விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர்.
உயிரிழந்தவர்களின் சடலம் மீதான பிரேத பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன் பிரேத பரிசோதனையின் பின்னர் அவர்களது சடலங்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் குறித்த விபத்தில் சிக்குண்ட 19 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அவர்களில், 11 பேர் தியத்தலாவை வைத்தியசாலையிலும் 7 பேர் பதுளை பொது வைத்தியசாலையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில், அவர்களில் இருவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
அத்துடன் விபத்து தொடர்பில் இராணுவத்தினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.