தென்கொரிய வாலிபருக்கும் கரூர் பெண்ணுக்கும் தமிழ்முறைப்படி திருமணம் நடைபெற்றுள்ளது.
கரூர் மாவட்டம் நடையனூரை சேர்ந்தவர் பொறியியல் பட்டதாரியான விஜயலட்சுமி (28). இவர் தனது சுயவிவரங்களை வேலைவாய்ப்பு தேடும் இணையதளத்தில் பதிவு செய்துள்ளார். மேலும், தனக்கு ஆங்கிலம் மற்றும் கொரிய மொழியும் தெரியும் என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.
இதனை தென் கொரியாவில் தகவல் தொழில்நுட்பத்துறையில் பணியாற்றும் மின்ஜுன் கிம் என்பவர் பார்த்து விஜயலட்சுமியை தொடர்பு கொண்டுள்ளார். பின்னர் வேலை சம்பந்தமாக இருவரும் சுமார் 6 மாதங்களாக பேசி வந்துள்ளனர்.
இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாற, கடந்த மார்ச் மாதம் விஜயலட்சுமி தென் கொரியாவுக்கு சென்று மின்ஜுன் கிம்மின் பெற்றோரை சந்தித்து பேசியுள்ளார். பின்னர் இரு வீட்டாரும் விஜயலட்சுமி – மின்ஜுன் கிம் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் இவர்களின் திருமணம் கரூர் மாவட்டம் நடையனூரில் வெகு விமரிசையாக நடைபெற்றது. மின்ஜுன் கிம் தமிழ் முறைப்படி பட்டு வேட்டி, பட்டு சட்டை அணிந்து விஜயலட்சுமியை தாலிகட்டி திருமணம் செய்துகொண்டார். இந்த திருமணத்தில் மின்ஜுன்கிம்மின் பெற்றோர் மற்றும் நண்பர்கள் என 4 பேர் கலந்து கொண்டனர்.