ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் (Vladimir Putin) வடகொரியாவிற்கு பயணம் மேற்கொண்டதைத் தொடர்ந்து கூட்டாண்மை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.
புடின் ரஷ்யாவின் ஜனாதிபதியாக முதல் முறையாக பதவியேற்றதில் இருந்து, 24 ஆண்டுகளில் முதல் முறையாக வடகொரியாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.
அவரது வருகையின்போது ஆயிரக்கணக்கான வடகொரியர்கள் ரஷ்ய மற்றும் வடகொரிய கொடிகள் , பூங்கொத்துக்களுடன் அவரை வரவேற்றனர். அத்துடன் ”புடினை வரவேற்கிறோம்” என கோஷமிட்டனர்.
புடின் வடகொரிய தலைநகரின் மையப்பகுதியில் உள்ள Kim Il Sung சதுக்கத்தில் உற்சாகமான கொண்டாட்டங்களுடன் கிம் ஜோங் உன்-ஐ (Kim Jong Un) சந்தித்தார்.
பின்னர் இரு நாடுகளின் தலைவர்களும் பரிசுகளை பரிமாறிக் கொண்டனர். அதனைத் தொடர்ந்து ரஷ்யா, வடகொரியா இடையிலான விரிவான கூட்டாண்மை ஒப்பந்தத்தில் புடின் மற்றும் கிம் இருவரும் கையெழுத்திட்டனர்.
ரஷ்ய அரசு செய்தி நிறுவனமான TASSயின்படி 1961, 2000 மற்றும் 2001ஆம் ஆண்டுகளில் கையெழுத்திடப்பட்ட முந்தைய ஒப்பந்தங்களுக்கு பதிலாக புடின், கிம் இருவரும் புதிய மூலோபாய கூட்டாண்மையில் கையெழுத்திட்டனர்.