குருணாகல், மஹாவ – நாகொல்லாகம பிரதேசத்தில் காட்டுப்பன்றிகளைப் பிடிக்க பொருத்தப்பட்ட மின்சார கம்பியில் சிக்கிய தனது தந்தையைக் காப்பாற்றச் சென்ற 17 வயது மகன் உயிரிழந்துள்ளார்.
க.பொ.த. உயர்தரப் படிப்பிற்கு தயாராகி கொண்டிருந்த நாகொல்லாகம பொலிஸ் பிரிவின் கரம்பே, பிடிவில்லாவைச் சேர்ந்த 17 வயதான எதிரிசிங்க ஆராச்சிலாகே கவிஷ்க எதிரிசிங்க என்ற மாணவனே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளார்.
அயல்வீட்டில் வசிக்கும் குடும்பம், காட்டுப்பன்றிகளை வேட்டையாடுவதற்காக பிரதான மின் கம்பியில் இருந்து சட்டவிரோதமாக மின்சாரம் எடுத்து இழுக்கப்பட்ட மின்சார கம்பியில் தற்செயலாக மோதியதில் தந்தை மீது மின்சாரம் தாக்கியுள்ளார்.
மின்சாரம் தாக்கி மகன் பலி
அப்போது தனது தந்தையைக் காப்பாற்ற முயன்ற மகன் மின்சாரம் தாக்கி உயிரிழந்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மின்சாரம் தாக்கப்பட்டதற்கு காரணமாக இருந்த மின்சார கம்பியை பொருத்தியதாக சந்தேகிக்கப்படும் நபர் நேற்று சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டார்.
பொல்பித்திகம ஆதார மருத்துவமனையில் இருவரும் அனுமதிக்கப்பட்டபோது மகன் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாகவும், உயிரிழந்த மகனின் தந்தை சுமார் 44 வயதுடையவர் எனவும் அவர் ஆபத்தான நிலையில் இருந்ததாகவும், மேலதிக சிகிச்சைக்காக குருநாகல் போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டதாகவும் மருத்துவமனை ஊழியர் ஒருவர் தெரிவித்தார்.
மேலதிக விசாரணை
நேற்று முன்தினம் இரவு 11.00 மணியளவில் தந்தை வீட்டிலிருந்து அருகிலுள்ள தோட்டத்திற்குச் சென்றிருந்தார். ஆனால் அவர் திரும்பி வராததால், அவரைப் பார்க்கச் சென்ற மகன் சம்பவத்தில் உயிரிழந்தார்.
மேலும் அவரது தந்தை இரவில் அந்த இடத்திற்கு ஏன் சென்றார் என்பது குறித்து விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.
சந்தேகநபர் மஹாவ நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.
சம்பவம் குறித்து நாகொல்லாகம போலீசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.








































