- ஒருவரை கேப்டனாக நியமித்தால் முதலில் அவரை நம்பி நியாயமான நீண்ட கால வாய்ப்புகளை கொடுக்க வேண்டும்.
- இந்திய அணியில் மிகச் சிறந்த வேகப்பந்து வீச்சு ஆல் ரவுண்டராகவும் கேப்டனாகவும் அசத்தும் திறமை பெற்றுள்ளார்.
விராட் கோலிக்கு பின் கேப்டனாக பொறுப்பேற்றார் ரோகித் சர்மா. கேப்டனான பிறகு ஹிட்மேன் என்ற தனது பெயருக்கேற்றார் போல் அதிரடியாக ரன்களை குவிக்க முடியாமல் தடுமாறிய அவர் காயம் மற்றும் பணிச்சுமை காரணமாக அடிக்கடி ஓய்வெடுத்ததால் 2022-ம் ஆண்டு வரலாற்றிலேயே 7 வெவ்வேறு வீரர்களை கேப்டனாக பயன்படுத்த வேண்டிய பரிதாபம் இந்தியாவுக்கு ஏற்பட்டது.
இதனையடுத்து ரோகித் சர்மா, ராகுல் போன்ற வீரர்களை கழற்றி விட்டு 2024 டி20 உலக கோப்பைக்கு முன்பாக ஹர்திக் பாண்டியா தலைமையில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பளித்து புதிய அணியை உருவாக்கும் வேலைகளை பிசிசிஐ துவங்கியுள்ளது. மேலும் கடைசி வாய்ப்பாக அக்டோபர் மாதம் சொந்த மண்ணில் நடைபெறும் 50 ஓவர் உலகக் கோப்பையில் ரோகித் சர்மா தலைமையிலான முதன்மை அணி விளையாடும் என்றும் நம்பப்படுகிறது.
இருப்பினும் ரோகித் சர்மா 35 வயதை கடந்து விட்டதால் 2023 உலகக் கோப்பை வென்றாலும் இல்லையென்றாலும் வருங்காலத்தை கருத்தில் கொண்டு அத்தொடருக்கு பின் ஹர்திக் பாண்டியா வெள்ளைப் பந்து கிரிக்கெட்டின் முழு நேர கேப்டனாக நியமிக்கப்படுவார் என்று செய்திகள் வெளியானது.
இந்நிலையில் இளம் வீரராக இருக்கும் ஹர்திக் பாண்டியாவை கேப்டனாக நியமிப்பதில் தவறில்லை ஆனால் ஒரு சில தோல்விகளுக்காக அவரை அவசரப்பட்டு கேப்டன் பதவியிலிருந்து நீக்க கூடாது என்று பிசிசிஐக்கு முன்னாள் கேப்டன் கபில் தேவ் கூறியுள்ளார்.
இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு:-
முதலில் கேப்டன் பொறுப்பு வழங்கும் நீங்கள் உலகம் என்ன சொல்லும் என்பதை பார்க்காமல் அணியை பார்த்து அவர் எப்படி சிந்திக்கிறார் என்பதை பார்க்க வேண்டும். ஒருவேளை ஹர்திக் பாண்டியா அங்கே கேப்டனாக இருந்தால் நீங்கள் ஒரு தொடரில் தோற்றால் உங்களை கேப்டன் பதவியிலிருந்து நீக்குவோம் என்று யாரும் அவரிடம் சொல்ல கூடாது.
ஏனெனில் நீங்கள் ஒருவரை கேப்டனாக நியமித்தால் முதலில் அவரை நம்பி நியாயமான நீண்ட கால வாய்ப்புகளை கொடுக்க வேண்டும். அப்போது தான் அவரால் சிறப்பான செயல்பாடுகளை வெளிப்படுத்தி வெற்றிகளை பெற்றுக் கொடுக்க முடியும். பாண்டியா உட்பட யாராக இருந்தாலும் தவறுகள் செய்வார்கள். ஆனால் அதற்காக அந்த தவறை பார்க்காமல் வருங்காலத்தை கருத்தில் கொண்டு அவர் எந்தளவுக்கு அணியை எடுத்து செல்கிறார் என்பதை பார்க்க வேண்டும். .
இவ்வாறு அவர் கூறினார்.