சவால்களுக்கு மத்தியிலும் உங்களுக்காக பாதுகாப்பான மற்றும் வளர்ச்சியடைந்த நாடொன்றை உருவாக்குவதற்கே நாம் இன்று பாடுபடுகின்றோம் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
குருநாகல் மலியதேவ மகளிர் கல்லூரியின் புதிய மூன்று மாடிக் கட்டிடத்தை நேற்று (06) மாணவர்களின் பாவனைக்காக திறந்து வைத்து உரையாற்றுகையிலேயே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,
”உங்களிடம் உள்ள சக்தி அறிவு கல்வியின் மூலமே அறிவு கிடைக்கிறது. யாரையும் சார்ந்திருக்காது உங்கள் சொந்தக் காலில் நிற்பதற்கான வாய்ப்பு அறிவால் ஏற்படுத்தப்படுகிறது.
எனவே செல்வந்தர்களாக இருந்தாலும் சரி ஏழைகளாக இருந்தாலும் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை அறிவாற்றலுடன் வளர்க்க வேண்டும்.
உங்கள் எதிர்காலத்தைப் பற்றியும் நாட்டின் எதிர்காலத்தைப் பற்றியும் சிந்தித்து கொவிட் தொற்றுநோயால் பாதிக்கப்பட்ட பாடசாலைக் கல்வியை நாங்கள் முறையாகத் தொடங்கினோம்.
ஆனால், அன்று கொவிட் காரணமாக வீட்டில் இருந்த பிள்ளைகள் கையடக்க தொலைபேசிக்கு அடிமையாகி இருப்பதாக பெற்றோர்கள் முறையிடுகின்றனர். இது குறித்து மருத்துவர்கள் கூட எச்சரித்துள்ளனர். தொழில்நுட்பத்தின் ஊடாக நன்மை ஏற்படும் அதேவேளை தீமைகளும் உள்ளன.
எனவே தவறான வழியில் செல்லாது தொழில்நுட்பத்தின் ஊடாக நன்மையை பெறுவதற்கு பிள்ளைகள் அறிந்துகொள்ள வேண்டும். எது சரி எது தவறு என்பதை பிள்ளைகளுக்கு கற்பிக்க வேண்டிய பொறுப்பு பெற்றோர் மற்றும் ஆசிரியர்களுக்கு உள்ளது.
கல்விக்காக இதுவரை எந்த அரசாங்கமும் ஒதுக்காத தொகையை இந்த ஆண்டு நாம் ஒதுக்கியுள்ளோம். ஆசிரியர்களின் சம்பளப் பிரச்சினைக்கு சாதகமான தீர்வை வழங்க முடிந்தது. பிள்ளைகளை மனதில் கொண்டே நாம் அனைத்தையும் செய்கிறோம்.
எனவே, குழந்தைகளின் கல்வி உரிமையை உறுதி செய்யும் வகையில், தற்போது 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளை வேலைக்கு அமர்த்துவதை சட்டப்படி தடை செய்துள்ளோம். பாடசாலை செல்லாத குழந்தைகளை கண்டறிந்து அவர்களை பாடசாலைக்கு அனுப்பும் திட்டமொன்றையும் செயல்படுத்தி வருகிறோம்.
கிடைத்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்தி, உண்மையான திறமையாளர்களாக எதிர்காலத்தை எதிர்கொள்ளுங்கள்.
சவால்களுக்கு மத்தியிலும் உங்களுக்காக பாதுகாப்பான மற்றும் வளர்ச்சியடைந்த நாடொன்றை உருவாக்குவதற்கே நாம் இன்று பாடுபடுகின்றோம் என்பதை நினைவில் கொள்ளுங்கள். உங்கள் அனைவருக்கும் சிறந்த எதிர்காலம் அமைய வாழ்த்துக்கள்” எனத் தெரிவித்தார்.








































