சுசில் பிரேமஜயந்தவின் வாய் அடைக்கப்பட்ட பின்னர் விமல் வீரவன்ச போன்றவர்கள், அரசாங்கத்தின் அனுமதியுடனேயே பேசுகின்றனர் என எதிர்க்கட்சியினர் தெரிவித்துள்ளனர்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போதே ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி இவ்வாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,
சுசில் பிரேமஜயந்தவின் வாயை அடைத்த பின்னர், அரசாங்கத்திற்குள் சிங்கம் போல் இருந்த மேலும் சிலர் நாய்க் குட்டிகளின் நிலைமைக்கு சென்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
அண்மையில் அமைச்சர் தினேஷ் குணவர்தனவின் காதருகே சென்று, நான் எதாவது கூறினால் சிக்கலாகுமா என்று வீரவன்ச கேட்டதை பார்க்க முடிந்தது. சிங்கம் போல் இருந்த விமல் வீரவன்ச போன்றவர்கள் நாய் குட்டிகள் போல் மாறியுள்ளனர்.
நாட்டில் இனவாதம், தேசப்பற்று பற்றி பேசிய வீரவன்ச போன்றவர்கள் அமைச்சு பதவி பறிபோய்விடும் என்ற அச்சத்தில் நாய் போல் மாறியுள்ளனர். அரசாங்கத்தின் கொள்கை, மோசடிகளை கூற முடியாது இவர்கள் தவிக்கும் போது அருவருப்பாக உள்ளது.
அத்துடன் நாட்டின் ஒரு அங்குல நிலத்தை கூட வெளிநாட்டவர்களுக்கு வழங்க போவதில்லை என உதய கம்மன்பில கூறினார். திருகோணமலை எண்ணெய் தாங்கிகளை 50 வருடங்களுக்கு இந்தியாவுக்கு குத்தகைக்கு வழங்கும் தீர்மானத்துடன் அமைச்சர் உதய கம்மன்பிலவின் தேசப்பற்றாளர் என்ற ஆடை அவிழ்ந்து போயுள்ளது.
எது எப்படி இருந்த போதிலும் டொலருக்கான அரசாங்கம் நாட்டின் வளங்களை விற்பனை செய்வதை நிறுத்த வேண்டும் எனவும் சமிந்த விஜேசிறி குறிப்பிட்டுள்ளார்.








































