வங்கதேச அணிக்கெதிரான போட்டியில், நியூசிலாந்து அணி வீரர் ராஸ் டெய்லர் விக்கெட் வீழ்த்திய வீடியோ இணையத்தில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.
நியூசிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச அணி, அங்கு இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது.
இதில் இரு அணிகளுக்கிடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் வங்கதேச அணி வெற்றி பெற்ற நிலையில், 2-வது டெஸ்ட் போட்டி கடந்த 9-ஆம் திகதி துவங்கியது.
அதன் படி முதலில் ஆடிய நியூசிலாந்து அணி, முதல் இன்னிங்ஸில் 6 விக்கெட் இழப்பிற்கு 521 ஓட்டங்கள் எடுத்து டிக்ளேர் செய்ய, அதன் பின் ஆடிய வங்கதேச அணி, முதல் இன்னிங்ஸில் 126 ஓட்டங்களுக்குள் ஆல் அவுட் ஆக, பாலோ ஆன் ஆன பின்பு, இரண்டாவது இன்னிங்ஸில் 278 ஓட்டங்களில் ஆல் அவுட் ஆக, இறுதியாக நியூசிலாந்து அணி 117 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இன்னிங்ஸ் வெற்றி பெற்றது.
இந்த டெஸ்ட் தொடரோடு நியூசிலாந்து அணியின் நட்சத்திர வீரர் ராஸ்டெய்லர் ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அதன் படி இரண்டாவது இன்னிங்ஸில், வங்கதேச அணி 9 விக்கெட்டுகளை இழந்து ஆடிக் கொண்டிருந்த போது, ராஸ் டெய்லருக்கு ஓவர் கொடுக்கப்பட்டது.
ராஸ் டெய்லர் சர்வதேச போட்டிகளில் பந்து வீசுவது மிகவும் அரிதானது என்பதால், அவரின் பந்து வீச்சு மிகுந்த எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியது.
அவர் வீசிய ஓவரில் வங்கதேச அணியின் கடைசி விக்கெட் விழுந்ததால், நியூசிலாந்து வீரர்கள் உச்சகட்ட மகிழ்ச்சியை வெளிப்படுத்தி டெய்லருக்கு வாழ்த்து தெரிவித்தனர். மேலும், இந்த வெற்றி மூலம் நியூசிலாந்து அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 1-1 என்று சமன் செய்தது.








































