சிறிலங்கா அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச சுசில் பிரேமஜயந்தவின் பதவியைப் பறித்த பின்னர் அரசாங்கத்தை விமர்சித்துவந்த அமைச்சர்கள் மௌனிகளாக மாறிவிட்டனர் என்று தென்னிலங்கை அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமைச்சர்களான வாசுதேவ நாணயக்கார, விமல் வீரவங்ச மற்றும் உதய கம்மன்பில ஆகியோர் தலைமையில் உருவாக்கப்பட்ட 11 கட்சிகளை கொண்ட மாற்று அணியினர், எதனையும் கூறவும் செய்யவும் முடியாத நிலைமைக்குள் தள்ளப்பட்டுள்ளதாகவும் கொழும்பு அரசியல் வட்டாரங்களை மேற்கோள்காட்டி தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த நிலையில், சிறிலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான கூட்டணியில் அங்கம் வகிக்கும் 11 கட்சிகள் இணைந்து உருவாக்கிய மாற்று அணியின் எதிர்காலம் தற்போது கேள்விக்குறியாக மாறியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அரசாங்கத்திற்குள் இருந்துகொண்டு அரசாங்கத்தை விமர்சித்தார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில், அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச, வருட ஆரம்பத்திலேயே சுசில் பிரேமஜயந்தவை ராஜாங்க அமைச்சர் பதவியில் இருந்து நீக்கினார்.
அரசாங்கத்திற்குள் இருந்துகொண்டு அரசாங்கத்தை விமர்சிக்க முடியாது எனவும் அப்படியான தேவை இருப்பவர்கள் எதிர்க்கட்சிக்கு சென்று அதனை செய்ய முடியும் என்ற செய்தியை கோட்டாபய இதன் மூலம் ஆளும் கட்சியினருக்கு வழங்கியிருந்தார்.
இச்சூழ்நிலையிலேயே சுசில் பிரேமஜயந்த பதவியில் இருந்து நீக்கப்பட்ட பின்னர், அரசாங்கத்திற்குள் இருந்து அரசாங்கத்தை விமர்சித்து வந்தவர்கள் தற்போது வாய் மூடி மௌனிகளாக இருந்து வருகின்றனர்.
சுசில் பதவி நீக்கப்பட்டதை தொடர்ந்து, 11 கட்சிகளை கொண்ட அணியினர் அரசாங்கத்தை விமர்சிக்கும் வகையிலான கருத்துக்கள் எதனையும் இதுவரை வெளியிடவில்லை.
பொதுஜன பெரமுன தலைமையிலான கூட்டணியில் அங்கம் வகிக்காத, ஆளும் கட்சிக்கு ஆதரவளித்து வரும் நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரதன தேரர் மாத்திரம், அரச தலைவரின் சேதனப் பசளை கொள்கையை விமர்சித்து இருந்தார்.
11 கட்சிகள் கொண்ட அணியில் இருக்குத் பிரதான கட்சியான சிறிலங்கா சுதந்திரக் கட்சி, அரசாங்கத்தில் இருந்து விலக தேவையான பின்னணியை தற்போது உருவாக்கி வருகிறது என்றும் தகவல் அறிந்த வட்டாரங்களை மேற்கோள்காட்டி தகவல்கள் வெளியாகியுள்ளன.








































