ஒமைக்ரோன் மாறுபாடு காரணமாக இலங்கையில் ஐந்தாவது கொரோனா வைரஸ் அலை உருவாகும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரித்துள்ளது.
வார இறுதி நீண்ட விடுமுறையின் போது, பொதுக் கூட்டங்கள் மற்றும் ஒன்றுகூடல்கள் அதிகளவில் இடம்பெற்றதால், அடுத்த இரு வாரங்களில் நாளாந்தம் இலங்கையில் பதிவாகும் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என, அந்தச் சங்கத்தின் மத்திய குழு உறுப்பினர் வைத்தியர் பிரசாத் ரணவீர தெரிவித்துள்ளார்.
ஒமைக்ரோன் மாறுபாட்டின் காரணமாக உலகம் முழுவதும் குறிப்பாக அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம் மற்றும் கனடாவில் நோய்த்தொற்று விகிதம் வெகுவாக அதிகரித்துள்ளது என்பது தெளிவாவதாக வைத்தியர் பிரசாத் ரணவீர கூறியுள்ளார்.
இலங்கையிலும் நோய்த்தொற்றுகள் சிறிதளவு அதிகரித்துள்ளதாக குறிப்பிட்டு அவர், ஒமைக்ரோன் மாறுபாட்டின் அதிக பரவல் தன்மை காரணமாக நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் சாத்தியம் இருப்பதாக அவர் வலியுறுத்தினார்.
தடுப்பூசித் திட்டத்தின் வெற்றியின் காரணமாக, கொரோனா வைரஸ் தொடர்பான இறப்புகளின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.








































