பிரித்தானிய பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி விவகாரங்களுக்குப் பொறுப்பான அமைச்சர் தாரிக் அஹமட் சிறிலங்காவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.
போர்க்குற்றம் மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்களுக்கு பொறுப்புக் கூற வேண்டும் என சிறிலங்கா மீது சர்வதேச அழுத்தம் பிரயோகிக்கப்பட்டு வரும் நிலையிலும் சிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதியை பிரிதானியா கைது செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ள நிலையில் இவரது விஜயம் இடம்பெற்றுள்ளது.
இந்த நிலையில் இன்று காலை சிறிலங்கா வெளிவிவகார அமைச்சில் அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் உள்ளிட்ட அமைச்சின் அதிகாரிகளுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டார்.
இந்த நிலையில், நேற்று மாலை இலங்கையின் அஹமதியா முஸ்லிம் சமூகம் உட்பட சிவில் சமூகப் பிரதிநிதிகள் மற்றும் மதத் தலைவர்களைச் அமைச்சர் தாரிக் அஹமட் சந்தித்திருந்தார்.
மனித உரிமைகள், முஸ்லிம் சமூகத்தின் பரந்த அக்கறைகள் மற்றும் மனித உரிமைகள் பேரவையின் செயல்முறையின் எதிர்பார்ப்புகள் குறித்த பயனுள்ள மற்றும் சுவாரஸ்யமான விடயங்கள் குறித்து கருத்துகளை பகிர்ந்துகொண்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், பிரித்தானியா மற்றும் சிறிலங்காவிற்கு இடையில் சுகாதார சேவைகள் ஒத்துழைப்பு தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடப்பட்டுள்ளது. இது சுகாதாரப் பாதுகாப்பு தொடர்பான சிறந்த நடைமுறை மற்றும் நிபுணத்துவத்தை மேம்படுத்துவதுடன், பிரித்தானியாவில் உள்ள சிறிலங்கா சுகாதார நிபுணர்களின் வேலைவாய்ப்புக்கான நெறிமுறை மற்றும் நிலையான ஆட்சேர்ப்பு திட்டத்தை உருவாக்கும் என அமைச்சர் தாரிக் அஹமட் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, ஐ.நா வதிவிட ஒருங்கிணைப்பாளர் ஹனா சிங்கரை சந்தித்த, பிரித்தானிய பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி விவகாரங்களுக்குப் பொறுப்பான அமைச்சர் தாரிக் அஹமட், சிறிலங்காவிற்கான அபிவிருத்தி முன்முயற்சிகளுக்கு ஆதரவளிக்கும் முயற்சிகள் பற்றி விவாதித்துள்ளார்.
நீதி மற்றும் நல்லிணக்கம், மனித உரிமைகள் பாதுகாப்பு, காலநிலை முயற்சிகள் மற்றும் சுகாதார அணுகலை மேம்படுத்துதல் குறித்தும் இதன்போது அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
மேலும், சிறிலங்காவில் செயற்படும் பிரித்தானிய நிறுவனங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பொதுநலவாய வணிக வங்கியுடன் ஒரு நுண்ணறிவு கலந்துரையாடலில் தான் பங்கேற்றதாக அமைச்சர் தாரிக் அஹமட் தனது ட்விட்டர் தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.
தற்போதைய பொருளாதார பாதிப்புகள் மற்றும் பிரித்தானியாவிற்கும் சிறிலங்காவிற்கும் இடையிலான வர்த்தகத்தை மேம்படுத்துவது பற்றி இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.
இதேவேளை, பிரிடிஷ் கவுன்சில் அதிகாரிகளையும் சந்தித்த அமைச்சர் தாரிக் அஹமட், சிறிலங்காவில் உள்ள பிரித்தானிய தூதரகத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற மர நடுகை நிகழ்விலும் பங்கேற்றுள்ளார்.








































