அரசாங்கம் பயங்கரவாத தடைச்சட்டத்தில் மாற்றங்களை செய்யப்பபோவதாகவும், வடக்கு – கிழக்கு பிரச்சினைக்கு தீர்வு காணவுள்ளதாகவும், அரசியல் அமைப்பு ஒன்றை உருவாக்கப்போவதாகவும் வெளியிடும் அறிவிப்புகள் உண்மையானவை அல்ல என மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது.
இந்த வாக்குறுதிகள் அனைத்தும் சர்வதேசத்திடம் கடன்களை பெற்றுக்கொள்வதற்கான முயற்சியே என அந்தக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று மூன்றாவது நாளாக இடம்பெற்ற அரச தலைவரின் அக்கிராசன உரை மீதான சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் பங்கேற்று கருத்து வெளியிடுகையில் அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார். இதன்போது மேலும் கருத்துரைத்த அவர்,
அரச தலைவரின் அக்கிராசன உரையின் போது நடைமுறை பிரச்சினைகள் எதற்கும் தீர்வுகள் வழங்கப்படவில்லை. அரச தலைவர் தமது உரையில், தமது அரசாங்கம் மனித உரிமைகளை மீறவில்லை எனக் கூறியிருந்தார்.
எனினும், நாடாளுமன்றத்தை ஒத்திவைத்தமையும், உள்ளூராட்சி மன்றத் தேர்தலை ஒத்திவைத்தமையும் மனித உரிமை மீறல்களாகும்.
மஹர சிறைச்சாலையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட 11 பேர் சுட்டுக்கொல்லப்பட்டமை இந்த ஆட்சியின் போதே இடம்பெற்றது.
சமூக ஊடகங்களில் கூறப்பட்ட விடயங்களுக்காக பலர் கைது செய்யப்பட்டமையும் மனித உரிமைகள் மீறலாகும். காவல்துறை காவலில் உள்ளவர்களின் ஆயுதங்களை மீட்பதாக கூறி அழைத்துச் செல்லப்பட்டு சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவங்களும் இந்த ஆட்சியில் இடம்பெற்றன.
இந்த நிலையில், பயங்கரவாத தடைச்சட்டத்தில் மாற்றங்களை செய்யப்போவதாகக் கூறுவதும், வடக்கு – கிழக்கு பிரச்சினைக்கு தீர்வு காணவுள்ளதாக கூறிய விடயமும் உண்மையானதல்ல. இவை சர்வதேசத்துக்கு பொய்யை கூறி கடன்களை பெற்றுக்கொள்வதற்கான முயற்சியாகும் என்றார்.








































