சேலம் டவுன் சாந்தி தியேட்டர் பகுதியில் ராம் பாலாஜி என்பவருக்கு சொந்தமான பழைய இருசக்கர வாகனங்களை விற்பனை செய்யும் நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்திற்கு கடந்த வெள்ளிக்கிழமை வந்த இரண்டு இளம் ஜோடியினர், புல்லட் வண்டி வாங்க இருப்பதாக தெரிவித்தனர்.
நிறுவன ஊழியர்கள் காண்பித்த வண்டிகளில் ஒன்னே முக்கால் லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஒரு புல்லட் வண்டியை தேர்வு செய்த ஒரு காதல் ஜோடி, அதனை ஓட்டி பார்த்து விட்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து ஊழியர்களும், ஒரு காதல் ஜோடி தானே வண்டியை ஒட்டி பார்க்கப் போகிறது., இன்னொரு காதல்ஜோடி இங்குதானே இருக்கிறது என்ற நம்பிக்கையில் இருசக்கர வாகனத்தை எடுத்து செல்ல அனுமதித்துள்ளனர்.
ஆனால் நீண்ட நேரமாகியும் புல்லட்டை ஓட்டிச் சென்ற காதல் ஜோடி, திரும்பி வரவே இல்லை. சினிமா பாணியில் நடந்த இந்த திருட்டு சம்பவத்தால் அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள், நிறுவனத்திலிருந்து மற்றொரு காதல் ஜோடி ஜோதிடம் விசாரித்துள்ளனர்.
அதற்கு அந்த காதல் ஜோடியோ, அவர்கள் யார் என்று எங்களுக்கு தெரியாது, நாங்கள் தனியாக தான் வந்தோம் என்று கை விரித்தனர். இதனால் பெரும் அதிர்ச்சியிலும், குழப்பத்திலும் ஊழியர்கள், உடனடியாக நிறுவனத்தின் உரிமையாளரான ராம் பாலாஜிக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலையடுத்து சிசிடிவி காட்சிகளையம், மற்றொரு காதல் ஜோடியையும் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் அந்த காதல் ஜோடியிடம் விசாரணை நடத்தியதில், வண்டியை திருடி சென்ற காதல் ஜோடியில் உள்ள பெண்ணை மட்டும் தங்களுக்கு தெரியும் என்று தெரிவித்துள்ளனர்.
இதனை அடுத்து அந்த பெண்ணின் உறவினர்களை காவல் நிலையத்திற்கு வரவழைத்த போலீசார், அவர்களிடம் நடத்திய விசாரணையில், இந்த வண்டியை திருடி சென்றவர் கிருஷ்ணகிரி அருகே உள்ள குப்பத்தை சேர்ந்த பிரவீன் குமார் என்பது தெரியவந்தது.
மேலும் அந்த வண்டியில் இருந்த பெண் அவரை காதலித்ததாகவும் சொல்லப்படுகிறது. இதனையடுத்து வழக்கு பதிவு செய்த போலீசார், வண்டியை எடுத்துச் சென்ற காதல் ஜோடியை தற்போது வரை தேடி வருகின்றனர்.








































