ராகமை மருத்துவப் பீட மாணவர்கள் மீது நடத்தப்பட்ட வன்முறை தாக்குதல் சம்பவம் ஒரு பெரிய விடயம் அல்ல எனவும் இந்த சம்பவத்தை அடிப்படையாக கொண்டு அருந்திக பெர்னாண்டோவின் அரசியல் பயணத்தை முடிவுக்கொண்டு வரும் முயற்சிக்கு தான் எந்த வகையிலும் இடமளிக்க போவதில்லை என அத்தரகம பஞ்ஞாலோக்க தேரர் தெரிவித்துள்ளார்.
கோட்டே பொடி ஹாமதுரு என அழைக்கப்படும் அத்தரகம பஞ்ஞாலோக்க தேரர், தற்போதைய அரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டு பங்களிப்பு செய்த முக்கிய பௌத்த பிக்குகளில் ஒருவர்.
கொழும்பில் நேற்று ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட அவர், தென்னம் பலகைகளுக்கு அடிக்கும் ஆணிகளை தலையில் அடித்த சித்திரவதை கூடங்கள் இருந்த நாட்டில், இரண்டு பிள்ளைகள் சண்டையிட்டு கொண்டதை பெரிதாக எடுத்துக்கொள்ள தேவையில்லை.
சண்டையிட்ட பிள்ளைகள் ஒழியவில்லை. சட்டத்தையும் கையில் எடுக்கவில்லை. அப்படி இருக்கும் போது ஏன் அருந்திக பெர்னாண்டோவை விரட்டுகின்றனர்.
என் மீது சேறுபூசுவார்கள். பணத்தை பெற்றுக்கொண்டதாக கூறுவார்கள். அவற்றை நான் பொருட்படுத்துவதில்லை. அருந்திக பெர்னாண்டோவை ஓதுக்கி தள்ளுங்கள் பார்க்கலாம்.
என்னிடம் அவர் உதவி கோரினால் நான் செய்வேன். அதுதான் உணர்வு. சிங்கள உணர்வு. அதுதான் மனிததன்மை. இதனால், பிரச்சினையை சட்டத்திடம் ஒப்படைத்து விட்டு அமைதியாக இருப்போம். இந்த தருணத்தில் அரசியல் செய்ய வேண்டாம்.
இந்த பிரச்சினையை மையப்படுத்தி அருந்திக பெர்னாண்டோவை அரசியலில் ஓரங்கட்ட விட மாட்டோம். அவர் இந்த அரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டு வர பாடுபட்டவர். அரசாங்கத்திற்காக குரல் கொடுப்பவர். இதனால், அவரை பாதுகாக்க நாங்கள் இருக்கின்றோம் என குறிப்பிட்டுள்ளார்.








































