தமிழகத்திலிருந்து படகு மூலம் இலங்கைக்குக் கடத்தப்பட இருந்த 400 கிலோகிராம் கஞ்சாவை நாகபட்டிணம் காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளதுடன், ஐவரைக் கைதுசெய்துள்ளனர்.
நாகபட்டிணம் – கீச்சாங்குப்பத்தில் உள்ள, பழைய மீன்பிடித் துறைமுகப் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த விசைப் படகு ஒன்றிலிருந்து, 200 பைகளில் பொதி செய்யப்பட்ட நிலையில், 400 கிலோகிராம் கஞ்சா காவல்துறையினரால் மீட்கப்பட்டுள்ளது.
அத்துடன், சம்பவம் தொடர்பில், ஐவர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், நான்கு உந்துருளிகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.
அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் அடிப்படையில், ஆந்திர மாநிலத்திலிருந்து வாகனம் மூலம் நாகபட்டிணம் மாவட்டத்துக்கு கஞ்சாவைக் கடத்தி, அங்கிருந்து படகு மூலம் இலங்கைக்குக் கடத்த திட்டமிடப்பட்டிருந்தமை தெரியவந்துள்ளது.
பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா, விசைப்படகு மற்றும் நான்கு உந்துருளிகளின் மதிப்பு ஒரு கோடியே 52 இலட்சம் இந்திய ரூபா எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.








































