சீனாவில் இருந்து நன்கொடையாக பெறப்பட்ட 1,000 மெட்ரிக் தொன் அரிசி, பாடசாலை செல்லும் மாணவர்களை கொண்ட குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு பகிர்ந்தளிக்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
மாணவர்களுக்கான மதிய உணவு திட்டம்
அதன்படி, 7,925 பாடசாலைகளைச் சேர்ந்த சுமார் 1,080,000 குழந்தைகள் இந்த திட்டத்தின் மூலம் பயனடைவார்கள். அவர்களில் பெரும்பாலானோர் 100 க்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட கிராமப்புறங்கள் மற்றும் தோட்டத் துறையைச் சேர்ந்த பாடசாலைகளின் மாணவர்களாவர்.
தற்போதைய பொருளாதார நிலை
இதேவேளை, மதிய உணவு ஒன்றுக்காக விநியோகஸ்தர்களுக்கு 30 ரூபா வழங்கப்பட்டு வந்த நிலையில் உணவுப் பொருட்களின் விலையேற்றம் காரணமாக அவர்கள் மதிய உணவை வழங்க முடியாதநிலை ஏற்பட்டதால், திடீரென நிறுத்தப்பட்ட மதிய உணவுத் திட்டத்திற்கு தற்காலிக மாற்றாக இந்த திட்டம் நடைமுறைக்கு வருகின்றது.
இதற்கமைய, மதிய உணவு திட்டத்தை மீண்டும் தொடங்கும் முயற்சியில் விநியோகஸ்தர்களுக்கு உணவு ஒன்றுக்கு 60 ரூபாவை வழங்க அரசாங்கம் இணக்கம் வெளியிட்டுள்ளது.








































