இயக்குனர் ரிஷப் ஷெட்டி ‘காந்தாரா -2’ திரைப்பட வேலையில் தீவிரமாக ஈடுப்பட்டு வருகிறது.
இப்படம் அடுத்த ஆண்டு வெளியாகவுள்ளதாக படக்குழு ஏற்கனவே தெரிவித்திருந்தது.
நடிகர் ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்த காந்தாரா திரைப்படம் கடந்த செப்டம்பர் 30-ஆம் தேதி வெளியானது. கடந்த வருடம் வந்த படங்களில் சிறிய பட்ஜெட்டில் தயாராகி அதிக வசூல் குவித்து திரையுலகினரையும் ரசிகர்களையும் பெரிய ஆச்சரியத்தில் மூழ்கடித்த கன்னட படம் காந்தாரா. இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட அனைத்து மொழிகளிலுமே வசூலை அள்ளியது.
கர்நாடகத்தில் வாழும் பழங்குடி மக்களின் சமய வழிபாட்டை மையமாக வைத்து உருவாகியிருந்த இப்படத்தை பலரும் பாராட்டினர். இதையடுத்து இப்படத்தின் இரண்டாவது பாகம் அடுத்த ஆண்டு வெளியாகவுள்ளதாக படக்குழு தெரிவித்திருந்தது. இந்நிலையில், இயக்குனர் ரிஷப் ஷெட்டி கர்நாடக முதல் மந்திரி பசவராஜ் பொம்மையை சந்தித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில்,”கொல்லூரில் முகாம்பிகை தரிசனம் செய்ய சென்ற போது முதல் மந்திரி பசவராஜ் பொம்மையை சந்தித்தேன், எனக்கு அரசியல் சாயம் வேண்டாம், காந்தார எழுத்தில் முழுமையாக ஈடுபட்டுள்ளேன், உங்கள் அனைவரின் அன்பும் வரமாக அமையட்டும்” என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.
வரவிருக்கும் கர்நாடக சட்டமன்ற தேர்தலில் முதல் மந்திரி பசவராஜ் பொம்மைக்கு ஆதரவாக நடிகர் கிச்சா சுதீப் பிரசாரம் செய்யவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.








































