ரஜரட்ட பல்கலைக்கழக நீச்சல் தடாகத்தில்; நண்பர்களுடன் நீராட சென்ற 6 மாணவர்களில் ஒரு மாணவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
முகாமைத்துவ விஞ்ஞான பீடத்தின் முதலாம் வருட மாணவர்கள் குழுவொன்றே நீச்சல் தடாகத்திற்குள் பிரவேசித்துள்ளனர்.
அறிவுறுத்தல்களை பின்பற்றாமல் மாணவர்கள் பாதுகாப்பற்ற முறையில் நடந்து கொண்டதன் காரணமாகவே இந்த விபத்து ஏற்பட்டதாக ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் சஞ்சீவனி கினிகத்தர தெரிவித்தார்.
மட்டக்களப்பு கொக்குவில் பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய முருகதாஸ் திலக்சன் என்பவரே நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
நீரில் மூழ்கி ஆபத்தான நிலையில் இருந்த மாணவர் மிகக் குறுகிய காலத்திற்குள் மிஹிந்தலை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும் அவர் ஏற்கனவே உயிரிழந்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
சடலம் பிரேத பரிசோதனைக்காக அனுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன், மிஹிந்தலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அதேவேளை நண்பர்களுடன் நீராட சென்றபோதே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கின்ற போதிலும் தன்னுடைய மகன் புலமைபரிசில் மூலம் பல்கலைகழகம் சென்றதாக குறிப்பிட்டுள்ளதுடன் கால்பந்து விளையாட்டிலும் இம்முறை தேர்வாகியுள்ளதாக மாணவனின் தாயார் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு புனிதமிக்கல் கல்லுரியின் கல்வி பயின்று ரஜரட்ட பல்கலைக்கழகத்திற்கு சென்றுள்ளார். படிப்பே குறிக்கோளாக கொண்டு இருந்த தனது மகன் உயிரிழப்பில் சந்தேகம் உள்ளதாக தாயார் தெரிவித்துள்ளார்.
உயிரிழந்தவரின் சடலம் அனுராதபுற வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் குறித்த சடலத்தினை மட்டக்களப்புக்கு எடுத்து வருவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது








































