ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 4 ஆம் திகதி வாக்குமூலம் வழங்குமாறு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மாளிகாகந்த நீதவான் நீதிமன்றம் இன்று (28) உத்தரவிட்டுள்ளது.
ஏப்ரல் – 21 பயங்கரவாத தாக்குதலின் உண்மையான சூத்திரதாரி யார் என்பது தமக்கு தெரியும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அண்மையில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டிருந்தார்.
நீதிமன்றம் உத்தரவிடுமாயின் குறித்த தகவல்களை தாம் இரகசியமாக நீதிபதிகளிடம் வழங்க தயாரெனவும் அவர் தெரிவித்திருந்தார்.
இந்த கருத்துக்கள் குறித்து அவர் குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்குச் சென்று வாக்குமூலம் வழங்கியிருந்தார்.
இந்த நிலையில், மைத்திரிபாலவின் இந்த கருத்து தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக இவ்வாறு நீதிமன்றில் முன்னிலையாகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
சட்டமா அதிபரின் பணிப்புரையின் பேரில், குற்றப் புலனாய்வு திணைக்களம் நீதிமன்றத்தில் இன்று (28) கருத்துக்களை அறிக்கையிட்டதன் பின்னர் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.