நாட்டின் பிரபல அரிசி வியாபாரியன டட்லி சிறிசேன வெளிநாடு சென்றுள்ளதாக கூறப்படுகின்றது.
இலங்கையில் ஏற்பட்டுள்ள அரிசி நெருக்கடி தொடர்பில் ஜனாதிபதி அனுர திஸாநாயக்கவுடனான கலந்துரையாடலில் கலந்து கொண்ட மறுதினம் அவர் தனிப்பட்ட விஜயமொன்றை மேற்கொண்டு வெளிநாடு சென்றுள்ளார்.
கண்காணிக்க ஆரம்பித்துள்ள அதிகாரிகள்
இதேவேளை, பொலன்னறுவையில் உள்ள அரலிய உள்ளிட்ட அரிசி ஆலைகளை நுகர்வோர் அதிகாரசபை அதிகாரிகள் கண்காணிக்க ஆரம்பித்துள்ளது. அத்துடன், அதிகாரசபையின் இரண்டு அதிகாரிகள் அங்கு நிலைகொண்டுள்ளனர்.
அதேவேளை ஜனாதிபதியுடனான கலந்துரையாடலின் போது உயர்த்தப்பட்ட புதிய கட்டுப்பாட்டு விலையில் அரிசியை வழங்குவதற்கு அனைத்து ஆலை உரிமையாளர்களும் இணக்கம் தெரிவித்தனர்.
ஜனாதிபதி எச்சரிக்கை
அதேவேளை நாட்டில் நிலவும் அரிசி தட்டுப்பாட்டை உடனடியாக நிவர்த்திக்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க அரிசி வர்த்தகர்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
சந்தையில் அதிகரித்துள்ள அரிசி தட்டுப்பாட்டுக்கான தீர்வு தொடர்பில் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற விஷேட சந்திப்பில் அவர் இந்த ஆலோசனையை வழங்கியுள்ளார்.
அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு இணங்க முடியாவிடின், அதற்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க நேரிடும் என்றும் ஜனாதிபதி எச்சரித்துள்ளார்.
சந்தையில் நிலவும் அரிசி தட்டுப்பாட்டிற்குத் தீர்வு காண்பதற்காக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க 2 தடவைகள் அரிசி ஆலை உரிமையாளர்களைச் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தார்.
எனினும், சந்தையில் அரிசி தட்டுப்பாடு மற்றும் நிர்ணய விலையை விட அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்யப்படுகின்றதாக நுகர்வோர் விசனம் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.