பயணிகள் பேருந்தில் பல்கலைக்கழக மாணவி ஒருவரை பாலியல் சீண்டல் செய்த குற்றச்சாட்டின் பேரில் கறுவாத்தோட்டம் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்ட நபருக்கு நீதிமன்றம் பிணையில் செல்ல அனுமதி வழங்கியது.
ஹொரணையில் இருந்து கொழும்புக்கு தனியார் பேருந்தொன்றில் பயணித்த 27 வயதுடைய பல்கலைக்கழக மாணவி ஒருவர், அவரது பின்னால் அமர்ந்திருந்த சந்தேக நபரால் பாலியல் சீண்டலுக்கு உட்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
நீதிமன்றில் முன்னிலை
பாதிக்கப்பட்ட பெண் பேருந்தின் உள்ளே குரல் எழுப்பி தமக்கு நடந்ததை வெளிப்படுத்தியபோது, பேருந்தினுள் இருந்த பொலிஸ் அதிகாரி ஒருவர் சந்தேக நபரைப் பிடித்து கறுவாத்தோட்டம் பொலிஸாரிடம் ஒப்படைத்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட பின்னர், சந்தேக நபர் பொலிஸாரால் கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
அதன்போது, சந்தேக நபருக்கு தலா 200,000 ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் செல்ல அனுமதி வழங்கிய கொழும்பு பிரதம நீதவான் சம்பவம் தொடர்பான வழக்கை எதிர்வரும் டிசம்பர் 1 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உத்தரவிட்டார்.








































