யாழ்ப்பாணம் நெல்லியடியில் உள்ள ஒரு பிரபல பாடசாலையில் அமைக்கப்பட்ட உயர்தரப் பரீட்சை மத்திய நிலையத்தில், பரீட்சை கண்காணிப்பு அதிகாரிகளால் உயிரியல் பாடத்தை எழுதிய 21 மாணவர்களின் முதலாம் பகுதிக்கான (பல்தேர்வு வினா) விடைத்தாள்கள் திருத்தும் பணிகளுக்காக அனுப்பப்படாமல் தவறவிடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை
நாடளாவிய ரீதியில் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை தற்போது நடைபெற்று வருகின்றது. அந்தவகையில் யாழ்ப்பாணம் நெல்லியடியின் பிரபல பாடசாலையொன்றில் உள்ள பரீட்சை மத்திய நிலையத்தில் உயிரியல் பாடத்தின் பல்தேர்வு வினாப் பரீட்சை நடத்தப்பட்டது.
21 மாணவர்கள் பரீட்சையில் தோற்றி, முறைப்படி விடைத்தாள்களைக் கையளித்த நிலையில் இந்த விடைத்தாள்கள் அன்றைய தினமே உரிய பாதுகாப்புகளுடன் திருத்தல் பணிகளுக்காக அனுப்பப்பட்டிருக்க வேண்டும்.
ஆனால், பரீட்சை நிலையத்தில் கடமையாற்றியவர்களின் கவனக்குறைவு காரணமாக, அவை உடனடியாக அனுப்பப்படவில்லை. மூன்று நாட்களின் பின்னர் சென்று பார்த்தபோதே, காகிதாதிகளுடன் சேர்த்து அவை கட்டப்பட்டு, அனுப்பப்படாமல் இருந்தமை அவதானிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தற்போது அந்த விடைத்தாள்களை திருத்தல் பணிகளுக்காக அனுப்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
உயர்தரப் பரீட்சையில், குறிப்பாக உயிரியல் போன்ற பாடங்களில், ஒரு சில புள்ளிகள் கூட மாணவர்களின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் நிலையில், தொடர்புடைய 21 மாணவர்களும் பெருமளவில் புள்ளிகளை இழக்கும் துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளது.
விடைத்தாள்கள் விடயம் கல்வித் திணைக்களங்களின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்ட உடனேயே, அந்தப் பரீட்சை மத்திய நிலையத்தில் கடமையாற்றியவர்கள் அங்கிருந்து உடனடியாக நீக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன், கவனக்குறைவாக செயற்பட்டவர்களுக்கு எதிராக திணைக்கள ரீதியான விசாரணைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கபப்டுகின்றது.
அதிகாரிகளின் கவன குறைவால் பரீட்சை எழுதிய மாணவர்கள் பெரும் இக்கட்டான நிலைக்கு முகம் கொடுத்துள்ளனர்.








































