சமூக வலைத்தளங்களில் பொலிஸாரின் பெயரில் பரப்பப்படும் போலியான அறிவிப்புகள் குறித்து பொதுமக்களை அவதானமாக இருக்குமாறு இலங்கை பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
‘பொலிஸ் அறிவித்தல்’ (Police Notice) என்ற பெயரில் பாதுகாப்பு அறிவுறுத்தல்களை உள்ளடக்கி பகிரப்படும் இச்செய்தி, பொலிஸ் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டது அல்ல என்றும், அது ஒரு போலியான தகவல் என்றும் பொலிஸ் தலைமையகம் தெளிவுபடுத்தியுள்ளது.
குறித்த செய்தியில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்கள், வாசகங்கள் மற்றும் வழிகாட்டல்கள் அங்கீகரிக்கப்படாதவை மற்றும் பொதுமக்களை திசைதிருப்பும் நோக்கம் கொண்டவை என பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இவ்வாறான உறுதிப்படுத்தப்படாத தகவல்களைப் பரப்புவது பொதுமக்களிடையே தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்துவதுடன், நாட்டின் அமைதிக்கும் குந்தகம் விளைவிக்கும் என அவர்கள் எச்சரித்துள்ளனர்.
எனவே, அரசாங்க நிறுவனங்களின் பெயரில் வரும் செய்திகளைப் பகிரும் முன்னர் அதன் உண்மைத்தன்மையை உறுதிப்படுத்துமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
பொலிஸ் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம், பொலிஸ் ஊடகப் பிரிவின் ஊடக அறிக்கைகள், உறுதிப்படுத்தப்பட்ட சமூக வலைத்தள பக்கங்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட ஊடகங்கள் வாயிலாக மட்டுமே அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான போலிச் செய்திகளுக்கு மத்தியில், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் சட்ட ஒழுங்கைப் பேணவும் பொலிஸார் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக பொலிஸ் ஊடகப் பிரிவு மேலும் குறிப்பிட்டுள்ளது.







































