திருகோணமலை சீனக்குடா எண்ணெய் குதங்களை இந்திய நிறுவனத்திற்கு விற்கப்படும் என எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில கூட ஏற்றுக்கொண்டுள்ளார்.
உண்மையிலேயே இந்த நாட்டின் விலைமதிக்க முடியாத சொத்துக்களான இந்த எண்ணெய் தாங்கிகளை விற்பது என்ற விடயத்தை ஒருபோதும் நாங்கள் ஏற்றுக்கொள்ள முடியாது என கிழக்கு மக்கள் குரல் அமைப்பாளரும், மக்கள் விடுதலை முன்னணியின் திருகோணமலை மாவட்ட அமைப்பாளருமான சட்டத்தரணி அருண் ஹேமச்சந்திரா தெரிவித்துள்ளார்.
திருகோணமலை சீனக்குடா எண்ணெய் குதங்களை இந்தியாவிற்கு குத்தகைக்கு விடப்பட்டுள்ளமைக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் பின் செய்தியாளர்கள் மத்தியில் பேசிய போது அவர் இதனைக் கூறியிருந்தார். இதன்போது மேலும் பேசிய அவர்,
“இந்த மண்ணிற்கு கடமைப்பட்டுள்ள அனைவரும் இந்த விற்பனைக்கு எதிராக அணி திரள வேண்டும் என்ற கட்டாயத்திற்கு தள்ளப்பட்டிருக்கின்றோம்.
எந்தவொரு மதிப்பீடும் செய்யாமல் விலை மதிப்பற்ற இந்தச் சொத்துக்களை விற்க முன் வருவது நிச்சயமாக கண்டிக்கத்தக்க விடயமாகும்.
நாட்டில் நிலவுகின்ற டொலர் பற்றாக்குறைக்கு இவ்வாறு குத்தகைக்கு வழங்கப்படுகின்ற இந்த எண்ணெய் தாங்கிகள் ஊடாக இலங்கையின் வர்த்தகத்தை அதிகரித்து பிரச்சினைக்கான தீர்வினை பெற்றுக் கொள்ள முடியும்.
உலக வரைபடத்தில் மிகவும் முக்கியமான வர்த்தகத்திற்கான கடல் வழிப் பாதையாக திருகோணமலை காணப்படுகின்றது.
பல உலக வல்லரசு நாடுகளின் பார்வையில் இருக்கின்ற கேந்திரம் மிக்க ஒரு இடமாக கருதப்படுகின்ற திருகோணமலை பிரதேசத்தின் இந்த எண்ணெய்க்கு தங்களை இந்தியாவிற்கு விற்பனை செய்வது ஏற்றுக்கொள்ள முடியாத விடயம்.
எனவே நாம் ஏனைய நாடுகளின் பகடைக்காய்களாக இருக்கக் கூடாது, எமக்குத் தேவையான சரியான திட்டங்களை நாங்களே வகுத்துக் கொள்ள வேண்டும்” என்றார்.








































