இலங்கை புகையிரத சேவையை தனியார் துறைக்கு விற்க அரசாங்கம் முயற்சித்தால் பாரிய தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கவுள்ளதாக புகையிரத சேவை ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
புகையிரத திணைக்களத்திற்கு சொந்தமான பெறுமதியான காணிகளை அமெரிக்க டொலர்களை பெற்றுக்கொள்ளும் நோக்கில் அரசாங்கம் விற்பனை செய்ய முயற்சிப்பதாக புகையிரத சேவைகள் தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
புகையிரத சேவைகள் தொழிற்சங்க கூட்டமைப்பின் இணை ஒருங்கிணைப்பாளர் எஸ்.பி.விதானகே, புகையிரத சேவையை மறுசீரமைத்து தனியார் நிறுவனத்திற்கு விற்க எந்த பிரிவினரையும் அனுமதிக்க மாட்டோம் என்றார்.
இதற்கு முன்னரும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாகவும், ஆனால் தொழிற்சங்கங்கள் உறுதியாக நின்று இலங்கை புகையிரத சேவை தனியார் மயமாக்கப்படுவதைத் தடுத்ததாகவும் அவர் கூறினார்.
இந்த நடவடிக்கை தொடர்பில் ஏனைய தொழிற்சங்கங்களுக்கு விளக்கமளிக்கவுள்ளதாக விதானகே குறிப்பிட்டார். அரசின் முயற்சிகளை மட்டும் தோற்கடிக்க மாட்டோம், அரசாங்கத்தையே தோற்கடிக்க தயங்க மாட்டோம் என்றார்.








































