டென்னிஸ் உலகத் தரவரிசையில் முதலிடத்தில் உள்ள நோவாக் ஜோகோவிச்சின் விசா விண்ணப்பம் முறையாக இல்லாததால் அவர் அவுஸ்திரேலியாவுக்குச் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
ஜோகோவிச் அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் பங்கேற்க நேற்று மெல்பர்ன் நகருக்குச் சென்றிருந்தார்.
போட்டியில் பங்கேற்ற விளையாட்டாளர்கள் முழுமையாகத் தடுப்பூசி போட்டிருக்க வேண்டும் என்று அவுஸ்திரேலியா இதற்குமுன் தெரிவித்திருந்தது.
கடந்த ஆண்டு ஜோகோவிச் தடுப்பூசி போடுவதை எதிர்ப்பதாகக் கூறியிருந்தார்.
அதிலிருந்து மருத்துவ விலக்கு அளிக்கப்பட்டுப் போட்டியில் பங்கேற்ற அவருக்கு அனுமதி வழங்கப்பட்டதாக முதலில் குறிப்பிடப்பட்டது. அவுஸ்திரேலிய ஓபன் நிர்வாகமும், விக்டோரியா அரசும் அதற்கு சம்மதம் தெரிவித்ததாக கூறப்பட்டது.
மெல்பர்ன் நகரில் துல்லாமரீன் விமான நிலையத்தில் ஜோகோவிச்சின் விசா விண்ணப்பம் பற்றிப் பல மணி நேரம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அவரது விசா ஆதாரங்கள் போதுமானதல்ல என அறிவிக்கப்பட்டது.
அவர் பெற்ற மருத்துவ விலக்கு, அவுஸ்திரேலிய எல்லை கடப்பதற்கான விதிகளுடன் தொடர்புடையதல்ல என அவுஸ்திரேலியா அரசு அறிவித்தது.
மெல்போர்ன் விமான நிலையத்தில் ஒன்பது மணிநேரம் காவலில் வைக்கப்பட்டிருந்ததைத் தொடர்ந்து கார்ல்டன் ஹோட்டலுக்கு அழைத்துச் செல்லப்பட்ட ஜோகோவிச் இன்றிரவு விமானத்தில் நாடு கடத்தப்படுவார் என்று கூறப்படுகிறது.
கடந்த மூன்று உட்பட ஒன்பது ஆஸ்திரேலிய ஓபன் பட்டங்களை வென்ற ஜோகோவிச், இந்த தீர்ப்பை எதிர்த்து விக்டோரியா நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யலாம் மற்றும் புதிய விசாவுடன் மீண்டும் விண்ணப்பிக்கவும் வாய்ப்புள்ளது.








































