மீன்பிடி தொடர்பான பிரச்சினைகளை நாம் சரியான முறையில் அணுகி தீர்வினை பெற்றுக்கொள்ள வேண்டுமென இலங்கை தொழிலாளர் காங்கிரசின் முக்கியஸ்தரும், பிரதமரின் இணைப்புச் செயலருமான செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
“எல்லை தாண்டி மீன் பிடித்தால் சிறையில் அடைக்கப்படுவோம், உடமைகள் அரசுடைமையாக்கப்படும் என்று தெரிந்தும் அவர்கள் இங்கே வந்து மீன்பிடிக்க மாட்டார்கள் என நான் நினைக்கின்றேன்.
எடுத்த எடுப்பில் சில விடயங்களை நாம் செய்ய முடியாது. இந்திய மீனவர்களை சிறைபிடித்து நீண்டகாலம் வைத்திருக்க முடியாது.
இந்தியாவுடன் நாம் நீண்ட காலமாக நற்புறவை பேணி வருகின்றோம். இலங்கை அகதிகள் பலருக்கும் தமிழக அரசு அங்கு அடைக்கலம் கொடுத்துள்ளது. அதேபோன்று சுமார் 50 ஆயிரம் வீடுகளை வடக்கு கிழக்கில் அமைத்து கொடுத்துள்ளனர்.
இரண்டு நாடுகள் நட்பு ரீதியாக பேசி தீர்த்துக்கொள்ள வேண்டிய பிரச்சினை. இதனை அரசியலாக்க கூடாது” என மேலும் தெரிவித்துள்ளார்.








































