ஐக்கிய மக்கள் சக்தியானது அரசியல் ரீதியில் புதியதொரு புரட்சியை ஏற்படுத்தியிருக்கின்றது என்று எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.
நேற்று கல்முனை வைத்தியசாலையில் இடம்பெற்ற நிகழ்வில் உரையாற்றிய அவர், எம்வசம் அதிகாரம் இருந்தாலும், இல்லாவிட்டாலும் மக்களுக்கு சேவையாற்ற முடியும் என்பதை நிரூபித்திருக்கின்றோம் எனக் கூறியுள்ளார். இதன்போது மேலும் உரையாற்றிய அவர்,
“எதிர்க்கட்சியாக இருக்கின்றபோதிலும் நாடளாவிய ரீதியில் பின்தங்கிய பிரதேசங்களிலுள்ள வைத்தியசாலைகளுக்கு அவசியமான உதவிகளை வழங்கிவருவதன் ஊடாக ஐக்கிய மக்கள் சக்தியானது அரசியல் ரீதியில் புதியதொரு புரட்சியை ஏற்படுத்தியிருக்கின்றது.
எதிர்வருங்காலங்களிலும் பல்வேறு பின்தங்கிய பிரதேசங்களிலுள்ள வைத்தியசாலைகளுக்கு அவசியமான உதவிகளை வழங்குவதற்குத் திட்டமிட்டிருக்கின்றோம்.
இருப்பினும் சுயமாக எதனையும் செய்யமுடியாதவர்கள் அரசியல் ரீதியிலான பொறாமை மற்றும் வெறுப்புணர்வின் வெளிப்பாடாக நாம் முன்னெடுத்துவரும் இச்செயற்திட்டத்தைக் கடுமையாக விமர்சிக்கின்றார்கள்.
‘மருத்துவ உபகரணங்களையும் பொருட்களையும் பகிர்வதற்கு மாத்திரமே சஜித் பிரேமதாஸ தகுதியானவர்’ என்று குறைகூறுவதன் ஊடாக சிலர் தமது அரசியல் இயலாமையை மறைத்துக்கொள்வதற்கு முயற்சிக்கின்றார்கள்.
இயற்கை அனர்த்தங்கள், தொற்றுநோய்ப்பரவல் உள்ளிட்ட சுகாதார நெருக்கடிகள், பொருளாதாரப் பிரச்சினைகள் போன்றவற்றுக்கு முகங்கொடுப்பதற்குரிய முன்னாயத்த நடவடிக்கைகள் தற்போதைய அரசாங்கத்தினால் மாத்திரமன்றி, எந்தவொரு அரசாங்கங்களினாலும் முன்னெடுக்கப்படவில்லை.
ஆகவே நாம் குறுங்கால மற்றும் நீண்டகால நோக்கிலேயே வைத்தியசாலைகளுக்குத் தேவையான மருத்துவ உபகரணங்களை நன்கொடையாக வழங்கும் செயற்திட்டத்தை முன்னெடுத்துவருகின்றோம்” என்றார்.








































