பசுபதி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘தண்டட்டி’. இப்படம் வருகிற 23-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
நடிகர் பசுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள ‘தண்டட்டி’ திரைப்படம் வருகிற 23-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
அறிமுக இயக்குனர் ராம் சங்கய்யா இயக்கியுள்ள இந்த திரைப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியானது. இந்தநிலையில் திருப்பூர் வேலம்பாளையத்தை சேர்ந்த எழுத்தாளர் அழகுபாண்டி அரசப்பன் என்பவர் ‘எனது சிறுகதையை திருடி, ‘தண்டட்டி’ திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது என புகார் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:- கடந்த 2020-ம் ஆண்டில் இருந்து சிறுகதை புத்தகம் எழுதி வெளியிட்டு வருகிறேன். திருப்பூரில் சாதாரண டீக்கடை வைத்து நடத்தி வருகிறேன். ‘ஒரு குத்துப் பருக்கை’ என்ற எனது சிறுகதை தொகுப்பில் ‘தண்டட்டி’ என்ற சிறுகதை எழுதியுள்ளேன்.
தற்போது நடிகர் பசுபதி நடிப்பில் வெளியாக உள்ள ‘தண்டட்டி’ திரைப்படத்தின் கதை, எனது சிறுகதை தொகுப்பில் இருந்து திருடப்பட்டுள்ளது. டிரைலரில் ஒளிபரப்பாகும் பாடலில் கூட என் சிறுகதையில் உள்ள விஷயங்கள் தான் இடம் பெற்றுள்ளது.
இது தொடர்பாக படத்தின் இயக்குனரை செல்போன் மூலம் தொடர்புகொள்ள முயன்றேன். ஆனால் அவர் செல்போனை எடுக்கவில்லை. எனவே இதனை சட்டரீதியாக அணுக திட்டமிட்டுள்ளேன். விரைவில் கோர்ட்டில் வழக்கு தொடர உள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.








































