அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவுகள் தொடர்பான மேன்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகளை தாக்கல் செய்யும் காலம் நேற்றுமுன் தினத்துடன் (10.07.2023) நிறைவடைந்த போதிலும், நியாயமான காரணம் இருப்பின் எவரும் ஜனாதிபதி அலுவலகத்தில் முறையிட முடியும் என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்றைய தினம் (11.07.2023) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இந்த விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளார்.
மேன்முறையீட்டிற்கான கால அவகாசம்
மேலும் கூறுகையில், அஸ்வெசும நலன்புரி உதவிகள் தொடர்பான மேன்முறையீடு செய்யும் திகதி நேற்றுமுன் தினத்துடன் முடிவடைந்தது.
குறித்த காலப்பகுதி வரை சுமார் 9,68,000 மேன்முறையீடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதுடன், 17,500 ஆட்சேபனைகளும் கிடைத்துள்ளன. விண்ணப்பங்கள் பிரதேச செயலாளர்களால் முறையாக ஆராயப்படுகின்றன.
இந்த மேன்முறையீடுகளை சமர்ப்பித்தவர்களில் 6 இலட்சத்திற்கும் அதிகமானவர்கள் ஏற்கனவே உதவிகள் கிடைக்கின்றவர்களாக இருக்கின்றனர்.
அதை விட அதிகமான உதவிகளை எதிர்பார்த்தே அவர்கள் மேன்முறைப்பாடுகளை முன்வைத்துள்ளனர்.
மாற்றுத் திறனாளிகள், சிறுநீரக நோயாளர்கள் மற்றும் காத்திருப்போர் பட்டியலில் உள்ளவர்களுக்கு எவ்வாறான பிரச்சினைகள் இருந்தாலும் பணம் செலுத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார்.
எவ்வாறாயினும், நியாயமான காரணங்கள் இருப்பின், கோரிக்கைகளை முன்வைக்கலாம். விண்ணப்பங்களை அவர்களது பிரதேசத்தின் மாவட்ட அரசாங்க அதிபர்கள் மற்றும் பிரதேச செயலாளர்களுக்கும் அனுப்பி வைக்க முடியும்.
அடுத்த மாதத்திற்குள் பிரச்சினைக்கு தீர்வு
எனவே அஸ்வெசும தொடர்பில் அரசியல் கோஷங்களை எழுப்ப வேண்டியதில்லை. 17,500 ஆட்சேபனைகள் மட்டுமே கிடைத்துள்ளன.
இது நேர்மையுடன் தொடங்கப்பட்ட திட்டம். அடுத்த மாதத்திற்குள் இப்பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கடந்த ஜூலை மாதம் முதல் நடைமுறைக்கு வரும் இந்த நலத்திட்ட உதவி கொடுப்பனவுகள் பயனாளர்களின் வங்கி கணக்கில் நேரடியாக வைப்புச் செய்யப்படும் ஜனாதிபதி அலுவலகம் முன்னதாக அறிவித்திருந்தது.
இந்த நிலையில் இத்திட்டத்தில் பலர் நிராகரிக்கப்பட்டிருந்த காரணத்தால் முறைப்பாடுகள் மற்றும் கோரிக்கைகளை முன்வைக்க கால அவகாசம் வழங்கப்பட்டு நியாயமான முறையில் பயனாளிகளை உள்வாங்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.








































