முன்னாள் கிரிக்கெட் வீரர் சனத் ஜயசூரிய மற்றும் சுற்றுலா அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ ஆகியோர் அவுஸ்திரேலியாவில் சட்ட நடவடிக்கைகளை எதிர்கொண்டுள்ள கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்கவை சந்தித்துள்ளனர்.
அவுஸ்திரேலியாவில் உணவகம் ஒன்றில் இடம்பெற்ற இந்த சந்திப்பு தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.
20க்கு 20 உலகக்கிண்ண கிரிக்கட் போட்டிக்காக அவுஸ்திரேலியாவுக்கு சென்றிருந்த நிலையில், தனுஷ்க, பெண் ஒருவரை பலவந்தமாக பாலியல் உறவுக்கு உட்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
நீதிமன்ற அனுமதி
இதனை தொடர்ந்து தனுஷ்க குணதிலக்க மீது பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பில் 4 குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், இதுவரை அவர் குற்றத்தை ஒப்புக்கொள்ளாத நிலையில் வழக்கு விசாரணைகள் இடம்பெற்று வருகின்றது.
இதனை தொடர்ந்து தனுஷ்க குணதிலக்க தனது பிணை நிபந்தனைகளை மீளாய்வு செய்யுமாறு கோரிக்கை விடுத்திருந்த நிலையில், வழக்கினை ஆராய்ந்த சிட்னி நீதிமன்றம் பிணை நிபந்தனைகளை தளர்த்தி உத்தரவிட்டிருந்தது.
அதன்படி, அவர் மீண்டும் வாட்ஸ்அப்பை பயன்படுத்தவும், இரவில் வெளியே செல்லவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளதுடன், நாட்டை விட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.








































