கடந்த ஆண்டு ஜுலே மாதம் விதிகளை மீறி சாலையில் சிகரெட் பிடித்து மாட்டிக்கொண்ட மூன்று இலங்கை கிரிக்கெட் வீரர்கள் மீது விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டது.
கடந்த ஆண்டு உலகம் முழுவதும் டெல்டா வகை கொரோனா தொற்று கடுமையாக பரவிவந்த காலத்திலும், இலங்கை கிரிக்கெட் அணி, இங்கிலாந்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டது.
அப்போது, கொரோனா அச்சுறுத்தலால் பிரித்தானியாவில் கடும் பயோ பபுள் (Bio Bubble) விதிகள் அமுல்படுத்தப்பட்டிருந்தன.
ஆனால் அதனையும் மீறி இங்கிலாந்து அணி வீரர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதனால், போட்டி தொடங்குவதற்கு முன் இங்கிலாந்து அணி மொத்த அணியையும் மாற்றி, புதிய அணியை களமிறக்கியது. இந்த இன்னல்களுக்கு மத்தியிலும் போட்டிகள் நடத்தப்பட்டன.
ஆனால், இலங்கை அணையைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர்களான தனுஷ்க குணதிலக்க (Danushka Gunathilaka), நிரோஷன் டிக்வெல்லா (Niroshan Dickwella) மற்றும் குசல் மெண்டிஸ் (Kusal Mendis) ஆகிய மூவரும், கோவிட் விதிகளை மீறி இங்கிலாந்தில் டர்ஹாமின் தெருக்களில் சுற்றித்திரிந்துள்ளனர். அதுமட்டுமின்றி, சாலைகளில் நின்று புகைபிடித்துள்ளனர். அவர்கள் புகைப்பிடித்துகொன்றிருந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானது.
இலங்கை அணியோ அந்த தொடரில் ஒரு போட்டியில் கூட வெற்றி பெறவில்லை. இதனால் ஏற்கனவே கடுப்பில் இருந்த ரசிகர்களுக்கு, இலங்கை வீரர்களின் செயல் மேலும் எரிச்சலையூட்டியது.
இதனையடுத்து மூன்று கிரிக்கெட் வீரர்களுக்கும் SLC நிர்வாகக் குழு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஒரு வருட தடை மற்றும் உள்நாட்டு விளையாட்டுகளில் இருந்து ஆறு மாதங்கள் தடை விதித்து, மூவரும் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
மேலும் அவர்கள் ஒவ்வொருவருக்கும் தலா 10 மில்லியன் இலங்கை ரூபாய் மதிப்பில் அபராதம் விதிக்கப்பட்டது. தடைக்காலத்தில் வீரர்கள் மனதளவில் பாதிக்க கூடாது என்பதால் மூவருக்கும் மனநல மருத்துவ சிகிச்சை இலங்கை கிரிக்கெட் வாரியத்தால் வழங்கப்பட்டது.
இதனிடையே மூன்று பேரும் தங்கள் மீதான தடையை விலக்கி கொள்ள வேண்டும் என்று இலங்கை கிரிக்கெட் வாரியத்திடம் கோரிக்கை வைத்ததனர்.
இதனை ஏற்று கொண்ட இலங்கை கிரிக்கெட் வாரியம் தற்போது அவர்கள் மீதான தடையை நீக்கயுள்ளது.
இந்த மூவரும் ஜிம்பாப்வேக்கு எதிரான ஒருநாள் போட்டித் தொடரில் உடற்தகுதித் தரத்தை எட்டினால் அவர்கள் இப்போது இடம்பெற முடியும்.
ஜிம்பாப்வேயைத் தொடர்ந்து, இந்த ஆண்டு அவுஸ்திரேலியா, இந்தியா மற்றும் வங்கதேசத்துக்கு எதிராக உள்நாடு மற்றும் வெளியூர் சுற்றுப்பயணங்களில் விளையாடலாம்.
வரும் 6 மாதங்களில் மூன்று கிரிக்கெட் வீரர்கள் மீது ஏதேனும் புகார் இருந்தால் , அவர்களுக்கு மீண்டும் தடை விதிக்கப்படும் என்று இலங்கை கிரிக்கெட் வாரியம் எச்சரிக்கை விடுத்துள்ளது.









































